தலித்தல்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டம்.
பிரதமர் ராஜிவ்காந்தி 1985 ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் (IAY) என்ற பக்கா வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவந்தார். இக்குடியிருப்பு திட்டத்தின் பயனாளிகளை வரையருக்கும்போது தலித் சமூகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீட்டில் 60% தலித்தகளுக்கும் சிறுபான்மையினருக்கு 15% என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தலித்துகளின் குடிசை வீடுகள் காங்கிரட் வீடுகளாக மாறின, இதற்கு எங்கள் கிராமத்தில் காலனி வீடுகள் என்பார்கள். இந்த சொல்லையே சேரி என்பதற்கு பதிலாக தலித் குடியிருப்புகள் இருக்கும் தெருவை காலனி தெரு என்று கூறினர்.
இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் (IAY) என்ற திட்டத்தை ஒரு சில மாற்றங்களுடன்
பிரதான் மந்திரி அவாஷ் யோஜனா கிராமின் (PMAY-G) என்று பெயர்மாற்றம் செய்து மோடி தலைமையிலான அரசு 2016 ஆம் ஆண்டு அறிவித்தது.
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த IAY திட்டதைப்போல PMAY-G திட்டத்திலும் தலித்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. IAY திட்டத்தில் தலித்கள் ஓரளவு பயனடைந்து இருந்தனர். PMAY-G திட்டத்தில் தலித்தகள் பெரிய அளவில் பயனடையவில்லை என்பது அதன் செயல்படும் முறையே நமக்கு உணர்த்துகிறது.
இத்திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்கீட்டின் அளவில் மாற்றம் கொண்டுவந்தது மத்திய அரசு அறிவித்தது. IAY திட்டத்தில் 75% நிதி மத்திய அரசும், 25% நிதி மாநில அரசும் வழங்கும். ஆனால், PMAY-G திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீடு 60-40 என்ற விகிதத்தில் பிரித்து மோடி அரசு நிதியின் அளவை குறைத்து. இதை அப்போது இருந்த மாநில அரசுகள் எந்த கேள்வியையும், எதிர்வினையையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடதக்கது.
PMAY-G திட்டத்தை மிக சரியாக இடைநிலை சமூகமே பயன்படுத்தி பலனடைந்தது, காரணம் ஒரு வீட்டினை சொந்தமாக கட்டும் பொருளாதாரம், இடத்திற்கான பட்டா போன்றவை அவர்களிடம் இருந்ததால் இத்திட்டம் அவர்களின் வீடு கட்டும் கனவை சிறப்பாக நிறைவேற்றியது.
பிரதமர் இத்திட்டத்தை அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் என்று கூறினார். ஆனால் தலித்தல்லாத மக்கள் வீடுகட்டும் திட்டமாக மாறியது. பட்டா மற்றும் பொருளாதாரம் இரண்டும் இல்லாத சமூகம் இத்திட்டத்தில் முன்னுரிமை இருந்தும் பயனடைய முடியவில்லை.
சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகள் கடந்தும் தலித் சமூகம் புறம்போக்கில் வாழ்வது மத்திய, மாநில அரசுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. இந்நிலை தொடரவே சாதிய மனோபாவத்துடன் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.
தொடர்ந்து புறம்போக்கில் தலித்தகள் வாழ்வதற்கு முக்கிய காரணம், ஒரு கிராமத்தில் புறம்போக்கு இடம் இருக்கிறது என்றால் அதனை பட்டாவாக மாற்ற ஊராட்சி மன்ற தலைவர் அதனை மக்களுக்கு வழங்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி, துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கையொப்பம் பெற்று முறையாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.
அரசு கிராம நிர்வாக அலுவலரின் மூலம் சரிபார்த்து மனைப்பட்டா வழங்கும். தலித்தல்லாத ஊராட்சி மன்ற தலைவர்கள் இதுபோன்று தீர்மானம் போட வாய்ப்பில்லை. தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிலை மிகமோசம், என்ன செய்வதென்றே தெரியாமல், எப்படி செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்ளாமலும், உள்ளூரில் இருக்கும் இடைநிலை சாதிக்கு பயந்து எதையும் செய்யாமலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் போல ஐந்து ஆண்டுகளை கழித்து விடுகின்றனர் என்பது நமக்கு வேதனையானது.
அரசு நினைத்தால் இந்த நடைமுறை சிக்கலை எளிதில் சரி செய்யலாம் ஆனால் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படாமல் வெற்று கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறது. தலித் மக்களின் அடிப்படை தேவைகளைகூட இவர்களால் இத்தனை ஆண்டுகளில் நிறைவேற்ற முடியவில்லை இதை கேட்கவும் நம்மிடம் ஆட்களில்லை. இதனை மனதில் வைத்தே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்த சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து எடுத்து சாதாரண உரிமையாக மாற்றினார்கள்.
மத்திய அரசு மாநிலத்துக்கு உரிய நிதியை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் மாநில அரசு, தலித்தகளுக்கு துணை திட்டத்தின் மூலம் ஒதுக்கிய நிதியை 3676 கோடி குறிப்பாக PMAY-G வீடு கட்டும் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை திரும்பி அனுப்பியத்தை சுட்டிக்காட்டி Time Of India ஆங்கில இதழ் 3 ஆகஸ்ட் 2019 யில் சண்முகசுந்தரம் என்பவர் கட்டுரை எழுதியுள்ளார்.
3676 கோடி பணம் திருப்பி அனுப்பியதற்கு தலித்களிடம் சொந்த பட்டா இல்லை என்பதை ஒரு காரணமாக அதிமுக அரசு கூறியது. இந்த பணத்தை கொண்டு தலித் மக்களுக்கு புதிய இடத்தினை வாங்கி வீடு கட்டி தராமல் திருப்பி அனுப்புவது எந்த வகையில் சரியான அணுகுமுறையாக அமையும்.
மாநில அரசு தலித்துகளுக்கு நிதி ஒதுக்காதது மட்டுமல்லாமல் மத்திய அரசு வழங்கும் நிதியையும் திருப்பி அனுப்புவது. தலித் மக்களின் மீது அதிமுக அரசுக்கு இருந்த அக்கறையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்கள் குடிசையில்லா தமிழகம் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். மேலும் இது தொடர்பாக சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்தார். இதனை கவனித்த அன்றைய முதல்வர் கருணாநிதி, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை ஆகஸ்ட் 2010 யில் உருவாக்கினார்.
திமுக அரசு இத்திட்டத்தை முதல் முறையாக கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமாரின் தொகுதிக்கு உட்பட்ட வல்லம்படுகை என்ற கிராமத்தில் முதல் பயனாளிக்கு அக்டோபர் 2010 யில் ஆணையை வழங்கியது
இதற்கு அடுத்து வந்த அதிமுக அரசு இத்தித்திட்டத்தை சிறு மாற்றத்துடன் பசுமை வீடு திட்டம் என்ற பெயரில் அறிவித்தது. பசுமை வீடு திட்டத்தில் முதல்கட்டமாக 60000 வீடுகள் கட்டுவதாக எண்ணிக்கையை நிர்ணயித்து, 17400 வீடுகள் அதாவது 29% தலித்தகளுக்கும் 600 வீடுகள் அதாவது 1% பழங்குடிகளுக்கும் என ஒதுக்கி திட்டத்தை அறிவித்தது.
IAY, PMAY-G, கலைஞர் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு திட்டம் போன்ற திட்டங்களில் காங்கிரஸ் அரசின் IAY திட்டத்தில் மட்டுமே தலித் மக்கள் ஓரளவு பயனடைந்தனர். மற்ற திட்டங்களில் நமக்கு பயனில்லாமல் போனது மட்டும்மல்லாமல் நமக்கு வந்த வீடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயளர்களால் மாற்று சமூகத்துக்கு வழங்கி நமக்கு இருந்த ஒன்றிரண்டு வாய்ப்பும் பரிபோனது.
மற்ற மூன்று திட்டங்களில் இல்லாத சிறப்பு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் இருந்தது. குடிசையில்லா தமிழகம் என்று கூறியவர் குடிசைகளில் அதிகம் வாழும் தலித்தகளை புறக்கணித்து அதை ஒரு பொது திட்டமாக அறிவித்தார். ஆனால் தலித்தகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பொதுதிட்டத்துக்கு பயன்படுத்தலாம் என்ற வரையறையை முதல் முதலில் உருவாக்கியர் கருணாநிதி என்று சிந்தனை செல்வம் MLA தற்போது சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
தற்போது இருக்கும் திமுக அரசு பசுமை வீடு திட்டத்தை மனை பட்டாவுடன் சேர்த்து இன்னம் விரிவுப்படுத்தி, திட்டத்தின் 50% வீடுகளை தலித்தகளுக்கு வழங்குதோடு மட்டுமல்லாமல் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு வீட்டின் மதிப்பை குறைந்த பட்சம் 15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுதும் வெள்ளத்தில் பாதிக்கப்படும் பக்கா வீடுகள் (சிமெண்டு வீடுகள்), கச்சா வீடுகள் (மண் வீடுகள்) இவற்றுக்கு கொடுக்கப்படும் நிவாரணம் மிகவும் சொற்பம். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் தலித்தகளே அதனால் ஒவ்வொரு ஆண்டும் அரசின் குறைந்தபட்ச நிவரணத்துக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை மாற்ற அரசு முன் வரவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் மாவட்ட மக்களே அதனால் சிறப்பு கவனம் கடலூர் மாவட்டத்துக்கு தரவேண்டும். குறிப்பாக தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். இறுதிவரை தலித் மக்களை கோரிக்கை வைக்கும் சமூகமாக பார்ப்பது அரசுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் சுயமரியாதையாக வாழும் எங்களுக்கில்லை.

Comments
Post a Comment