சித்தர் மரபு பௌத்த மரபே



மீளும் பௌத்தம்-சித்தர் மரபு பௌத்த மரபே


என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை பொறையார் (பிறையாரு) நகரிலே அமைந்தது. ஓய்வு நேரத்தை அமைதியாக கழிக்கும் இடமாக  பொறையார் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பாப்பையா மடம் எனக்கு அமைந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்து செல்லும் தொலைவில் பௌத்த அடையாளங்களை தாங்கி பாப்பையா மடம் இருக்கிறது. 

பொறையாரின் புறநகர் பகுதியான கோட்டைமேடு என்ற பகுதியில் ஶ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி மடம் அமைந்துள்ளது. மடத்தின் வாசலின் இருபக்க  சுவரிலும் புத்தம் சரணம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சித்தர் மடத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள தொடர்பை நமக்கு துவக்கத்திலேயே காட்டுகிறது.




பாப்பையா மடம் இலங்கை தாய்லாந்து மற்றும் திபெத் போன்ற நாடுகளின்  பௌத்த விகார் அமைப்புடன் ஒத்து  மடத்தின் கட்டிடக்கலை அமைந்துள்ளது. இலங்கை புத்த அமைப்பின் உதவியால் மாமல்லபுரத்தில் செய்து  கொண்டுவரப்பட்ட புத்தரின் சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து சுமார் (5+12) 17 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சீவர ஆடையில் நின்ற நிலையில் புத்தரின் சிலையில் தலையில் ஐந்து தலை நாகம் மற்றும் வலது கையில் அபய முத்திரையுடன் அமைந்துள்ளது. 

உயரமான நின்ற நிலை புத்தரின் சிலை தற்போதும் பர்மா, இலங்கை நாடுகளில் உள்ள பௌத்தர்களின் வழிபாடான நாக சின்னத்துடன்  இன்றும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பௌத்த நூலான மணிமேகலையில் நாகர்கள் பௌத்த மதத்தை ஏற்று பின்பற்றினார்கள் என்று கூறுகிறது. 

மடத்தின் பராமரிப்பாளர் மற்றும் பூசாரியிடம் விசாரித்தபோது  பாப்பையா சுவாமி என்ற சித்தர் வாழ்ந்து வந்தார் என்றும் அவர் கோரக்க சித்தரின் சீடராக இருந்தார் என்றும் இருவரும் பௌத்த கருத்துக்களை ஏற்று மக்களிடம் கொண்டு சென்றார்கள், பிற்காலத்தில் பாப்பையா சுவாமி ஜீவ சமாதி அடையவே அவரின் பெயரிலே மடம் இயங்குகிறது என்றார்.

மடத்தின் அருகில் ராஜிவ் காந்தி நகரில் வாழும் மக்களிடம் விசாரிக்கும்போது பாப்பையா சுவாமிகள் முன் ஜென்மத்தில் சானாஸ்டா என்ற பெயரில் புத்தத்துறவியாக இருந்தார். தல யாத்திரையாகப் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, பூம்புகார் வரும்போது அங்கேயிருந்த மக்கள் அவரை அன்போடு வரவேற்று, அருகேயுள்ள தரங்கம்பாடி என்றழைக்கப்படும் குலசேகரப் பட்டினத்திற்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். மக்களின் அழைப்பை ஏற்று  பொறையாரில் இருந்த விகாருக்கு புத்த துறவி சானஷ்டா வருகை புரிந்தார்.

நாகப்பட்டினத்தில் புத்த விகார் இருந்த காலகட்டத்தில் பொறையாரில் ஒரு புத்த விகார் இருந்துள்ளதை இதன் மூலம் உணரலாம். பொறையாரில் சண்டிகாதேவி விகார் என அழைக்கப்பட்ட  விகாரத்தில் பெண் துறவிகள் அல்லது பிக்குணி மட்டுமே இருந்தனர் என்றும் மக்களின் அழைப்பை ஏற்று சானாஸ்டா பொறையார் சண்டிகாதேவி விகார்  வந்து பல நாள்கள் விகாரில் தங்கியிருந்தார். பின்னர் சண்டிகாதேவி விகாரிலேயே பரிநிர்வாணம் அடைந்தார். அடுத்த பிறவியில் அவர் பாப்பையா சுவாமிகள் எனப்பெயர் பெற்று அப்பகுதியில் வாழ்ந்து வந்தார் என்று கூறுகிறார்கள். இக்கருத்தை நேரடி கள ஆய்வுச் செய்து  பௌத்த ஆய்வாளர் ஜம்புலிங்கம் அவர்களும் உறுதிப்படுத்தி உள்ளார்.

பாப்பையா சுவாமி மடத்தின் விழாக்களின் போது ஒட்டப்படும் சுவரொட்டிக்களில் சங்க காலத்தில் சண்டிகா தேவி விகாராக இருந்துள்ளதை நினைவு கூறுகிறது. பாப்பையா சுவாமியின் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஓம்ஸ்ரீ கோரக்க தேவாய நமோ நமஹா!
ஓம்ஸ்ரீ சானஷ்டா மஹா புத்தாய நமோ நமஹா!!
ஓம்ஸ்ரீ பாப்பையா மகா சித்தாய நமோ நமஹா!!!




இவ்வாசகத்தின்  மூலம் சானஷ்டா  புத்தமத துறவி என்பதை தெளிவாக கூறுகிறது. மேலும் மடத்தில் இருக்கும் பெண்தெய்வத்தின் பெயர் அம்மா அருள்மிகு ஸ்ரீ பௌத்த பூரணி பவதாரணி மகாகாளி என்று பௌத்த முன்னெட்டுடன் உள்ளது. இந்த தெய்வத்தை பற்றி மக்களிடம் விசாரிக்கும்போது பௌத்த பெண் துறவி அல்லது பிக்குணி என்று மக்கள் கூறுகிறார்கள். பௌத்த பூரணியை வெள்ளி, செவ்வாய் நாட்களில் வேண்டினாள் நோய் நொடி நீங்கி பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்த தெய்வத்துக்கு ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேற்கூறிய கதைகளுக்கு வலுசேர்க்கும் சான்றுகளாக இதனை பார்க்கலாம். இதன் மூலம் பாப்பையா ஜீவ சமாதி மடம் ஒருகாலத்தில் மிகப் பெரிய புத்த விகாராக இருந்து தற்போது அதன் எச்சம் மட்டுமே உள்ளதை உணரலாம்.

இந்தியா முழுவதும் பௌத்தம் பரவி புத்த பிக்குகளால் மேலைநாடுகளுக்கும் தம்ம கருத்துகள் பரவியிருந்தது. தமிழகத்தில் பௌத்த தளமான காஞ்சீவரம் அடுத்து நாகப்பட்டினம் (நாகர்பட்டினம்) சிறந்த தளமாக விளங்கியது. தற்கால பகுதியான நாகப்பட்டினம் மற்றும் காவேரிபூம்பட்டினத்தில் புகழ்பெற்ற பௌத்த விகார்கள் தோன்றி பௌத்த
சமயம் செழிப்பாக இருந்துள்ளது என்பதன் சான்றாக மேலையூரிலும் அதன் சுற்றுவட்டாரம் முழுக்க கிடைத்திருக்கும் பௌத்த சார்ந்த அகழாய்வு முடிவுகள் மற்றும் மேலையூரில் இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்து இருக்கும் பௌத்த விகார் சான்றாக உள்ளது.



நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவேரிபூம்பட்டினம்,மேலையூர், புத்தமங்கலம், மணலூர்,புத்தகரம், குறும்பூர், குத்தாலம், பெருஞ்சேரி என்ற வரிசையில் பொறையாரும் இணைந்துள்ளது. இங்கு குறிப்பிட்டிருந்ததைப்  போல பொறையாரிலும் ஒரு பௌத்த விகார் இருந்திருக்கிறது என அறிய முடிகிறது.
அந்த விகாரில் பௌத்த துறவிகள் பலர் தங்கி இருந்திருக்கிறார்கள்.அந்த விகாரின் பெயர் சண்டிகாதேவி விகார் என்றும் அறிய முடிகிறது.

மடத்தில் இருக்கும் ஆன்ம பீடம் பற்றி பூசாரி கூறும்போது ஆன்ம பீடத்தின் உள்ளே எந்த சிலையும் இல்லை உள்ளே கண்ணாடி மட்டுமே உள்ளது. உள்ளே யார் சென்றாலும் அவர்களின் உருவம் மட்டுமே அதற்கான நோக்கம் தன்னை அறிதல் என்று பூசாரி கூறினார். இது புத்தரின் போதனையான "உனக்கு நீயே ஒளியாய் இருப்பாய்" என்ற புத்த  தத்துவத்தின் சாரம் உள்ளதை உணரலாம்.

ஞானசாஸ்டா  அல்லது ஞானசாஸ்தா என்ற வழிபாடும் சண்டிகாதேவி விகாரில் இருந்துருக்கிறது தற்போது வழக்கில் இல்லை என்பதை பூசாரி கூறுகிறார். இதில் சாஸ்தா என்ற பாலி மொழி சொல் புத்தரை குறிக்கிறது.
பாலியில் சாஸ்தா என்றும் தமிழில் சாத்தன் என்றும் அழைக்கப்படுகிறது. சாத்தன் என்பதற்கு உணவின்றி ஒடுங்குதல் என்பதாகும். புத்தர்தான் முதன் முதலில் உணவின்றி ஒடுங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக புத்தருக்கு சாஸ்தா அல்லது சாத்தன் என்று பெயர்பெற்றார்.

ஒரு காலத்தில் பௌத்தம் செழிப்பாக இருந்தது. பௌத்தம் 16 நூற்றாண்டு வரை  செழித்து இருந்ததற்கு சான்றுகள் நம்மிடம் கிடைத்து இருக்கிறது அதற்கு பிந்தைய காலத்தில்தான் வைதிக மத சூழ்ச்சியால் பௌத்தம் வீழ தொடங்கியதை  இதன் மூலம் நம்மால் உணர முடிகிறது. 

கோரக்கரின்  ஜீவ சமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கிறது. அங்கு விழாக்களில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் முக்கியமானவை, அதில் சித்தர்களுக்கு உணவு வழங்குவதற்கு மேற்கொள்ளும் சடங்கு முறை மிக முக்கியமானது. 

ஒரு சொல் தமிழ் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதற்கான பின்புலம் அர்த்தம் பொதிந்தாகவே இருக்கவேண்டும். அப்படியாக நம் சமூகத்தில் தம்மம் என்ற சொல் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் தம்ம சோறு-தம்ம தொட்டி-தம்ம கஞ்சி என்று பௌத்த பின்புலத்துடன் இயங்கி இருந்துருக்கிறது என்பதை மானுடம் நவம்பர்-ஏப்ரல் 2021 அய்யா ஸ்டாலின் ராஜாங்கம் தம்ம சோறு-தம்ம தொட்டி-தம்ம கஞ்சி என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். 

கோரக்கநாதருக்கான விழாநாளில் கோயிலின் தசலைமைப் பூசாரி இரண்டு பக்கமும் உரி தொங்கும் காவடியோடு தெருக்களில் வலம் வருவார்."அன்னகாவடி தர்மம் தாயே" என்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்றபடி குரல் கொடுப்பார். நான் ஏழை  என்பது இதன் பொருளல்ல. துறவிகளுக்கு அளிப்பதற்காகக் கொண்டு செல்லும் அன்னகாவடியைக் கொண்டவன் வந்திருக்கிறேன் என்பதே இதன் பொருள்.

கோரக்கருக்கு பௌத்த சார்பு இருப்பதை  பொறையாரில் இருந்த  சண்டிகாதேவி விகார் கூறுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பௌத்த பண்பாட்டின் முக்கிய கூறான தானம் அல்லது தம்மம் பெரும் நிகழ்வு அன்னகாவடி என்ற பெயரில் கோரக்கர் ஜீவ சமாதி இருக்கும் வடக்கு பொய்கை நல்லூரில் இன்றும் நடைபெறுவது கோரக்கர் பௌத்த கருத்தை ஏற்று செயல்பட்டவர் என்பதை   உறுதிப்படுத்துகிறது. பொறையார் சண்டிகா தேவி விகார் மற்றும் வடக்கு பொய்கை நல்லூர் கோரக்கர் பற்றிய விரிவான ஆய்வுகள் நமக்கு தேவைப்படுகிறது. 

புகைப்படங்கள்: Er. செல்வா

Comments

Post a Comment

Popular posts from this blog

அறநிலையதுறையில் சாதியம்

மாநாடு