அறநிலையதுறையில் சாதியம்

 

அறநிலையதுறையில் சாதியம்



திமுக அரசு பருவமழை காலத்தில் வெள்ள  நிவாரணப் பணிகளில் காட்டும் ஆர்வத்தை விட மற்ற அதிகாரமிக்க  பல பொறுப்புகளை சத்தமில்லாமல் நியமித்து வருகிறது. திமுக அரசு இப்படியான அதிகாரமுடைய பொறுப்புகளை நியமிப்பதன்  மூலம் சாதியமைப்பை கட்டுடையாமல்  பாதுகாக்கும் பணியை  மேற்கொள்கிறது. குறிப்பாக அரசு  வழக்கறிஞர்கள் நியமனம் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.

திமுக அரசு இரண்டு நிலைப்பாட்டை மையமாக வைத்துகொண்டு சமூக நீதி என்ற பெயரில் அரசியல் செய்கிறது. ஒன்று ஏற்கனவே இருக்கும் சாதியமைப்பை வன்கொடுமை மற்றும் படுகொலை நடைபெறும் போது அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து சூத்திர விசுவாசத்தை திமுக காட்டுகிறது.

மற்றொன்று திமுக அரசு முதலமைச்சருக்கு  கொடுக்கும்  முக்கியத்துவத்துக்கு அடுத்தபடியாக இந்து அறநிலையத்துறை மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம்  மக்கள் மத்தியில் கட்டமைத்து வருகிறது இதிலும் கவனமாக ஸ்டாலின் அரசு மதப்பற்றை கடந்த சூத்திர சமூகத்தின் விசுவாசத்தையும் சேர்த்தே செய்து வருகிறார்.

உதாரணமாக அரசு வழக்கறிஞர் நியமனம் முழுவழும் சாதி இந்துக்களுக்கு வழங்கி தன் சமூக நீதியை திமுக அரசு பாதுகாத்து வருகிறது. மேலும் இந்த நிலையே மாவட்ட நீதிமன்றங்களிலும் தொடரும் என்பதே எதார்த்தம்.  சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் திமுக தற்போது இரண்டில் கவனம் செலுத்துகிறது ஒன்று சாதி மற்றொன்று மதம் சாயம் புதிய சாதி.

தற்போது இந்து அறநிலையத்துறை கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வரைவு அறிக்கையை முதல்வர் சம்பந்தப்பட்ட துறையிடம்  கேட்டுள்ளார். இந்த வரைவு அறிக்கை கிடைத்தவுடன் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்கள் அனைத்துக்கும் அறங்காவலர்கள் நியமிப்பது என்று அரசு முடிவு எடுத்துள்ளது.

நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதை போல கோவில்களிலும் அறங்காவலர்கள் நியமிக்கிறது. இதற்கு சிறப்பான எந்த சட்ட வரையறையும் கிடையாது. இதற்கான சட்ட வரைவுகளை இதற்கு முன்பு இருந்த திராவிட கட்சிகள் உருவாக்கவும் இல்லை. அப்படி இருக்கும் ஒரு சில வரையறைகளும் கூட சாதி இந்துக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.

கோவில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களுக்கு சமூகத்தில் மிக முக்கியமான அதிகாரமும், அங்கீகாரமும் கிடைக்கிறது. இது போன்ற அதிகாரம் உடைய பொறுப்புகளை பட்டியல் சமூகத்திற்கு இதுவரை திராவிட ஆட்சிகளில் பெரிய அளவில் வழங்கியது கிடையாது. காரணம் கோவில்கள் பெரும்பாலும் சூத்திரர்கள் கட்டுப்பாட்டிலும் ஒரு சில  கோயில்கள் பிராமணர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.

திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தை ஏன் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மற்றும் அறங்காவலர்கள்  நியமனத்தில்  காட்டவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் மூலம்  ஒரு சில  தலித்துகளுக்கு  மட்டுமே வேலை கிடைக்கும் மாறாக அதிகாரம் கிடைக்காது. ஆனால் தமிழகத்தில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை எத்தனை என்பது இன்றுவரை சரியான எண்ணிக்கை நம்மிடம்  இல்லை. திமுக அரசு வந்த பிறகு அறநிலையத்துறை இப்படியான அறிக்கையையும்  இதுவரைக்கும் வெளியிட்டதில்லை. ஒப்பீட்டளவில் அறங்காவலர்கள்  முழுவதும் சாதி இந்துகளே உறுப்பினர் பொறுப்பு மட்டுமே ஒருசில கோவில்களில் தலித்களுக்கு வழங்குகிறார்கள்.

அறங்காவலர்கள் நியமனத்தில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையை காட்ட வேண்டும். மேலும் இதற்கு சாதிவாரியான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். காரணம் கோவில்களில் அறங்காவலர்கள்  தலித்துகளை நியமிப்பது கிடையாது.  மக்கள் தொகை அடிப்படையில் பட்டியல் சமூகத்துக்கு 25% அறங்காவலர்கள் திமுக அரசு நியமிக்க வேண்டும்.

ஒரு உதாரணம் மட்டுமே சொல்ல விரும்புகிறேன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பட்டியல் சமூகத்திற்கான உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்த பறை தட்டான் வகையறாவை சேர்ந்த அய்யாதுரை  என்ற பறையர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

மயிலாடுதுறையின் நகர் மன்ற உறுப்பினர், கௌரவ நீதிபதி மற்றும்
ஒரே நேரத்தில் ஏழு கோயில்களுக்கு அறங்காவலராகவும் இருந்துள்ளார். இதுபோன்ற பல அதிகாரமிக்க பொறுப்பை வட்டார அளவில் இயங்கிய தலித் சமுகத்தவர்களுக்கு  காங்கிரஸ் வழங்கியுள்ளது. 1967 பிறகு வந்த திராவிட ஆட்சிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன மாதிரியான வளர்ச்சியை மற்றும் அதிகாரத்தை பட்டியல் சமூகத்திற்கு கொடுத்துள்ளது. இப்படிப் பார்த்தால் பூஜ்ஜியம் என்பதே நமக்கு விடையாகக் கிடைக்கிறது.

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தப்பிறகு செய்த சாதனை என்னவென்றால் தலித்களிடம்  இருந்த கொஞ்ச அதிகாரத்தையும் சூத்திரர்களுக்கு மடைமாற்றம்  செய்ததுதான். கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் கேட்பது கூட எங்களின் தற்காலியக தீர்வு மட்டுமே. இதற்கு நியாமான காரணம் என்னவென்றால் எங்களின் பௌத்த விகார்களே இன்று வைதிக கோவில்களாக உள்ளது. நிரந்தர தீர்வு  இந்து மயமாக்கப்பட்ட பௌத்த விகார்களை எங்களின் ஒப்படைப்பதே ஆகும்.

நன்றி:மருத்துவர் ரேணுகாதேவி, மருத்துவர் அன்பழகன், முத்து பிரதீபன் சாக்கியா.

Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

மாநாடு