வாத்தியார் வேலு 1916 -1982
வாத்தியார் வேலு 1916 -1982
அருள் முத்துக்குமரன்
தஞ்சை பகுதியை பற்றி பேசும்போதெல்லாம் கூலி உயர்வு சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் நடந்த சாதி ரீதியான வன்கொடுமைகள் குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே அங்கு செயல்பட்ட தலித் ஆளுமைகள் பற்றிய கவனம் பெறாமலே போகிறார்கள். அந்த வகையில் மயிலாடுதுறை பகுதியில் ஆசிரியர் வேலு என்பவர் பட்டியல் சமுக மக்களின் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது யாரும் அறியாமல் இருந்தது.
சுதந்திரத்துக்கு முன்பே திருவள்ளுவர் பெயரில் மாணவர் விடுதியை நடத்தி மயிலாடுதுறை வட்டார மக்களுக்கு கல்வி போதித்து வந்தார். அதன் பின்பு பெடரேஷன் அமைப்பில் தொண்டு வீராசாமி, நடுதிட்டு கூத்தரசன் கே.பி.எஸ்.மணி போன்றவர்களுடன் இணைந்து இழி தொழில் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மக்கள் பணியில் இருந்ததால் தான் பணியாற்றிய ஆசிரியர் பணியை துறந்து சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மாயூரம் தாலுகா ஆதிதிராவிட சமுதாய முன்னேற்ற கழகத்தார் என்ற சமுதாய முன்னேற்ற சங்கத்தை 1945க்கு முன்பே தொடங்கி பட்டியல் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். இந்த அமைப்பின் மூலம் இழி தொழில் ஒழிப்பு பிரச்சாரத்தை மிக தீவிரமாக தொண்டு வீராசாமியுடன் இணைந்து கிராமம் கிராமமாக சென்று செய்தார். மயிலாடுதுறையில் பட்டியல் மக்கள் ஒன்று கூடி தங்களின் பிரச்சனைகள் தீர்த்து கொள்வதற்காகவும் தங்களுக்கென்று ஒரு இடம் வேண்டும் என்கிற பரந்துபட்ட நோக்கில் சங்கத்துக்கு தலைமையகம் மயிலாடுதுறை நகரில் உருவாக்கப்பட்டது.
திராவிட கழகத்துடன்
இந்தியா தனது முதல் தேர்தலை சந்திக்கும்போது தந்தை பெரியார் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுயிருந்தார். அதற்காக கம்யூனிஸ்டுகளை ஆதரித்தது மட்டுமல்லாமல் சில இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத அரசு என்ற தனது பிரதான குற்றச்சாட்டை மக்களிடம் முன்வைத்தார்.
சுயேச்சை வேட்பாளர்களை ஆதரித்ததில் மயிலாடுதுறை இரட்டை தொகுதியில் போட்டியிட்ட வேலுவை தந்தை பெரியார் ஆதரித்தார். 1952 ல் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குத்தாலம், திருக்கடையூர், பொறையார், திட்டச்சேரி, நன்னிலம், பேரளம் போன்ற ஊர்களில் வாத்தியார் வேலுக்கு தந்தை பெரியார் வாக்கு சேகரித்தார். தேர்தலில் வெற்றிபெற்ற வேலு உள்ளிட்ட நபர்களுக்கு பாராட்டு கூட்டம் தந்தை பெரியார் தலைமையில் திருவாரூர், சந்தைபேட்டை , மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் நடைபெற்றது.
சட்டமன்றப் பணிகள்
தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க போதுமான இடங்களில் வெற்றி பெறவில்லை அதனால் பிற கட்சிகள் மற்றும் சுயேட்சிகளின் ஆதரவை அணுகியது. உழைப்பாளர் கட்சி மற்றும் ஒரு சில சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. இந்தருணதில் காங்கிரஸ் வேலுவை அணுகியபோது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று மறுத்து மக்களுக்காக பணியாற்றினார்.
சுயேட்சையாக வெற்றிபெற்ற 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து எஸ்.சுயபிரகாசம் தலைமையில் திராவிட பார்லிமென்ட் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் நோக்கம் சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சனை ஒரு கட்சியாக இருந்து செயல்பட்டால் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. திராவிட பார்லிமென்ட் கட்சியில் வாத்தியார் வேலு இணைத்து சட்டமன்றத்தில் மக்களுக்காக செயல்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மயிலாடுதுறை வட்டார பகுதி மாணவர்கள் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் சென்று படிப்பதலால் பல சிரமங்களை சந்திக்கிறார்கள் அதனால் அரசு கல்லூரி வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்தார். மேலும் தருமபுரம் ஆதினம் கல்லூரிக்கு தேவையான இடத்தை ஒதுக்கிய பிறகும் அரசு கண்டுகொள்ளவில்லை என்கிற விமர்சனத்தார். அதன் பிறகே அரசு அனுமதி தந்தது இக்கல்லூரி மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் எளிதில் கல்லூரி பயில வழிவகுத்தது.
சயேட்சையாக வெற்றிபெற்று இருந்தாலும் கருத்து ஒத்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாநிலத்துக்கு பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்கிற தீர்மானத்தை 1954ல் கொண்டுவந்து சட்டமன்றத்தில் பேசினார். ஆந்திர மாநிலம் பிரிப்பு, பண்ணையால் பாதுகாப்பு சட்டம் போன்ற அரசு நடவடிக்கைகளில் பட்டியல் மக்கள் சார்பாக நின்று களமாடினார்.
இவரின் காலத்தில் பட்டுக்கோட்டை பகுதியில் இயங்கிய இரட்டைமலை சீனிவாசன் நினைவு விடுதியை நடத்திய வீரமுத்து அவர்களுடன் இணைந்து செயல்பட்டது மட்டுமல்லாமல் அதற்கான அரசு உதவிகளையும் சட்டமன்றத்தில் வாதிட்டு பெற்றுத்தந்தார். பட்டியல் சமூக மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்காகவும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். சமூக பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய ஆசிரியர் ஆ. வேலு அவர்களின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி போற்றுவோம்.
Comments
Post a Comment