திமுகவின் சமூக நீதி என்பது அநீதியே
திமுக கடலூர் மாவட்டத்தில் கட்சியின் அடையாளமாக தொடக்க காலகட்டத்தில் இருந்தே M.R. கிருஷ்ணமூர்த்தி என்ற வன்னியர் சமுகத்தவரை முன்னிறுத்துகிறது. அவரின் இறப்புக்கு பிறகு அவரது மகன் M.R.K பன்னீர் செல்வத்தை முன்நிறுத்துகிறது. கடலூர் மாவட்டத்தில் 33-35% (இந்த புள்ளி விவரம் தேர்தல் நேரத்தில் பத்திரிகைகள் தருவது உண்மையான புள்ளிவிவரம் சற்று கூடுதலாக இருக்கும்) மக்கள்தொகை கொண்ட பறையர் சமூகத்துக்கு எந்த உரிய அங்கீகாரமும் இதுவரை தந்ததில்லை.
கடலூர் மாவட்டத்தில் திமுக கட்சியை வளர்த்ததில் பட்டியல் சமூகத்துக்கு முக்கிய பங்குண்டு (இது தமிழக அளவிலும் பொருந்தும்). பட்டியல் சமூகத்தை சார்ந்த முடிகண்டநல்லூர் சி.கோவிந்தராஜ் திமுகவை மக்களிடம் கிராமம் கிராமமாக சென்று வளர்த்தார். இதன் பயனாக பட்டியல் சமூக மக்களின் மத்தியில் பெரும் ஆதரவை திமுக பெற்றது. காங்கிரஸ் கட்சியில் L. இளையப்பெருமாள் அவர்களின் சொந்த ஊர் காட்டுமன்னார்கோவில் என்பதால் அவரை எதிர்க்க ஒரு பட்டியல் சமூகத்தவர் தேவை என்பதாலேயே திமுக சி.கோவிந்தராஜை முன்நிலைப்படுத்தியது.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி தனி தொகுதியாக 1967 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அறிவித்தபோது, முதல் முறையாக திமுக சார்பாக சி.கோவிந்தராஜ் போட்டியிட்டார்.
1967ம் ஆண்டு நடந்த இத்தேர்தலில் எஸ். சிவசுப்ரமணியம்(காங்கிரஸ்) 30521 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சி.கோவிந்தராஜ்(திமுக) 30387 வாக்குகள் பெற்றார். சி.கோவிந்தராஜ்(திமுக) வெறும் 134 வாக்குகள் வித்தியாசத்தில் L. இளையப்பெருமாள் ஆதரவு காங்கிரசு வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலுக்கு பிறகு சி.கோவிந்தராஜ் (திமுக) கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரர் புலவர் ஆறுமுகனார் தமிழ் பயின்று புலவரானவர். தமிழ் ஆசிரியராய் தன் வாழ்வை துவங்குவதற்கு முன் கல்வியினை இடையில் விட்டு தேசம் காக்க துப்பாக்கி ஏந்தி போரிட்டு சிறை சென்றவர். நாட்டுக்காக பல தியாகங்களையும், சித்தரவதைகளையும் அனுபவித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தன் அரசியல் வாழ்க்கையை அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளம் அமைப்பில் (AISCF) பேராசிரியர் N. சிவராஜ் தலைமையில் L. இளையப்பெருமாள் உடன் இணைந்து பணியாற்றினார். தமிழ் ஆசிரியர் என்பதால் திமுக வின் பற்றுகொண்டு தன் ஆசிரியர் தொழிலை விட்டு திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுக கட்சி முதன் முதலில் தான் சந்தித்த 1957 இல் நடந்த தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர். அதனைத் தொடர்ந்து சுவாமி சகஜானந்தர் இறப்புக்கு பிறகு 1959 இல் நடந்த சிதம்பரம் தொகுதி இடைத் தேர்தலிலும் 1962 இல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவரையும் பிற்காலத்தில் உரிய அங்கீகாரம் தராமல் கைவிட்டது.
புலவர் ஆறுமுகம், சி.கோவிந்தராஜ் போன்றவர்கள் கட்சிக்கு கடுமையாக உழைத்து வளர்த்தும், அவர்கள் சார்ந்த சாதியின் காரணமாக எந்த அதிகாரமிக்க பொறுப்பும் வழங்காமல் திமுக தட்டிகழித்தது. மற்ற சமூகங்களில் வாரிசுகளை கூட அங்கீகரிக்கும் திமுக உழைக்கும் பட்டியல் சமுகத்தவர்களை மட்டும் அங்கீகரிக்க மறுப்பது ஏன்? உதயநிதி, அன்பில் பொய்யாமொழி, மருத்துவர் எழிலன் போன்ற மூன்றாம் தலைமுறை உயர்சாதிகளுக்கு வாய்ப்பும் அதிகாரமும் தரும் திமுக பட்டியல் சமூகத்துக்கு இப்படி செய்ததுண்டா?
கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மூன்று முறை (1977,1980,1996) MLA-வாக வெற்றிபெற்ற மருதூர் ராமலிங்கத்துக்கு எந்த அதிகாரமிக்க பொறுப்பும் திமுக வழங்கவில்லை. கடலூர் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு தகுதிவாய்ந்த மருதூர் ராமலிங்கத்துக்கு தராமல் வன்னியர் சமூகத்தை சேர்ந்த M.R. கிருஷ்ணமூர்த்தியின் மகன் M.R.K.பன்னிர் செல்வத்துக்கு சாதியின் அடிப்படையில் பொறுப்பு வழங்கியது திமுக.
புலவர் ஆறுமுகம், சி.கோவிந்தராஜ் மற்றும் மருதூர் ராமலிங்கம் போன்றவர்களின் உழைப்பை அறுவடை செய்துகொண்டு எந்த அங்கீகாரமும் வழங்காமல் L. இளையப்பெருமாள் என்னும் ஆளுமையை எதிர்க்க மட்டுமே பயன்படுத்தி பிறகு இவர்களை திமுக ஓரங்கட்டியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மாவட்டத்தில் எழுச்சி பெரும்போது திமுக பட்டியல் சமூகத்தை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆரம்ப கட்ட பொறுப்பாளர்களான கரிகாலன், தடா. பெரியசாமி மற்றும் க.திருவள்ளுவன், விநாயகமூர்த்தி போன்றவர்கள் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் 2001 சட்டமன்ற தேர்தலில் மங்களூர் தொகுதியில் VCK கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றிபெறவே இந்த நெருக்கடியை சமாளிக்க மு.கருணாநிதி மேற்கு மாவட்ட செயலாளராக பறையர் சமுகத்தை சார்ந்த வே. கணேசனுக்கு வழங்கினார். VCK தொடக்கத்தில் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பால் வளர்ந்த இயக்கம் குறிப்பாக திமுகவை எதிர்த்து உருவான இயக்கம்.
இப்படியாக தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பறையர் சமூக தலைவர்களை திமுக புறக்கணித்தே வருகிறது. இதன் எதிரொலியாக குமராட்சி ஒன்றிய செயலாளர் தேர்விலும் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 57 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க இரண்டு கட்சிகளும் குமராட்சி ஒன்றியத்தை இரண்டாக மேற்கு மற்றும் கிழக்காக பிரித்து வன்னியருக்கு ஒருவருக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பும் , பறையர் சமூகத்துக்கு ஒரு ஒன்றிய செயலாளர் பொறுப்பும் என பிரித்து வழங்கியுள்ளது. பறையர் சமுகத்தவர்களுக்கு குமராட்சி ஒன்றியத்தில் அதிமுக நெடும்பூர் பாலகிருஷ்ணன் என்பவருக்கும், அமமுக M.K.தோட்டம் சுப்ரமணியசாமி என்பவருக்கும் ஒன்றிய செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது.
தி.மு.க குமராட்சி ஒன்றியத்தை நான்காக பிரித்து நான்கு ஒன்றிய செயலாளர்களும் வன்னியரை நியமித்தது. தி.மு.க கட்சியில் 35 ஆண்டுக்கும் மேலாக மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட கவுன்சிலர் P. V. முருகையன் தலைமையில் பட்டியல் சமூக கிளை செயலாளர்கள் இணைந்து மாவட்ட செயலாளர் M.R.K பன்னிர் செல்வத்திடம் அதிமுக மற்றும் அமமுக இரண்டாக பிரித்து கொடுத்ததை சுட்டிக்காட்டி திமுகவில் நான்கு ஒன்றியத்தில் மூன்றை வன்னியர்களுக்கு, ஒன்றை பறையர் சமூகத்துக்கும் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதனை கேட்ட M.R.K.பன்னிர் செல்வம் கோபப்பட்டது மட்டுமல்லாமல் சாதி பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசியுள்ளார். உடன் வந்த மற்ற பொருப்பாளர்கள் அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டி அருவருக்கும் வகையில் நடந்துள்ளார். எப்போதும் போல இவர்களும் வந்துவிட்டனர். இவை அனைத்தும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்தது. இந்த சம்பவம் குமராட்சி வட்டாரத்தில் அரசியல் ரீதியாக இயங்கும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
தற்போது தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியில் இருக்கிறது. M.R.K பன்னிர் செல்வமும் அமைச்சர் ஆகிவிட்டார். மறுபடியும் குமராட்சி ஒன்றியத்தை ஐந்தாக பிரித்து நலம்புத்தூர் நடராஜன், வல்லம்படுகை ராஜேந்திரன், திருநாரையர் சோழன், நெடும்பூர் கோவிந்தசாமி, பெராம்பட்டு சங்கர் என்று ஒன்றிய செயலாளர்கள் அனைவரையும் வன்னியர்களாக திமுக நியமித்துள்ளது.
அனைத்து நியமனங்களும் மாவட்ட செயலாளர் M.R.K.பன்னிர் செல்வம் பரிந்துரையிலே நடக்கிறது. ஏற்கனவே குமராட்சி ஒன்றியத்தை நான்காக பிரிக்கும்போதும் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களை மட்டுமே நியமித்தார். அப்போது பட்டியல் சமூக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது ஐந்தாக பிரிக்கும்போது பிள்ளையார்தாங்கள் (புளியந்தாங்கள்) P.V முருகையன், கொத்தவாசல் நாகராஜன், பரிவிளாகம் P.K.சாமியப்பன் போன்ற தகுதியான பறையர் சமுகத்தவர்கள் மாவட்ட செயலாளர் M.R.K.பன்னிர் செல்வத்திடம் முறையிட்டும் அதை பொருட்படுத்தாமல் மறுபடியும் வன்னியர் சமுகத்தவருக்கே ஒன்றிய செயலாளர் பொறுப்பு வழங்கி தன் சமுகநீதியை நிலைநாட்டியுள்ளார்.
திமுக கட்சியில் இப்படி எந்த ஒன்றியத்தையும் நான்கு அல்லது ஐந்தாக பிரித்து பொறுப்பு வழங்காதபோது குமராட்சி ஒன்றியத்தை பிரித்து வழங்குவதன் உள்நோக்கம் என்ன? ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் வன்னியர்களை நியமிப்பது சாதிய நோக்கம் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.
திமுக ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படியான சாதிவெறியர்களுக்கு அதிகார குவியலை வழங்கினால் மற்ற சமூக மக்களின் நிலை என்ன? இதுதான் திமுகவின் சமூகநீதி என்றே நாம் புரிந்துகொள்ளலாம். திமுக எப்போதும் பகுத்தறிவாக பேசி சாதி ரீதியாக செயல்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக பறையர் சமூக மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாவதை தவிர்க்க முடியாது. மேலும் திமுக பொறுப்பாளர்கள் தேர்வில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும்.
நன்றி புகைப்படங்கள் மனோஜ்





திமுகவீன் சன்முகநீதியை அம்பலபடுத்தியமைக்கு நன்றிங்க அய்யா
ReplyDelete