உள் ஒதுக்கீடு அரசியல்

ரவிக்குமாரின் முகநூல் பக்கத்திலிருந்து 

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  தமிழகத்தில் பட்டியல் மக்கள் 1 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 504 பேர். அதில் அருந்ததியர்களின் 18 லட்சத்து 61 ஆயிரத்து 457. அதாவது 2001 மக்கள் தொகை கணக்குப்படி 3 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சமூகத்துக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வழங்க முடிவு செய்தது 2006 - 2011 வரையிலான மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

அதன்படி 2009ஆம் ஆண்டு முதல் பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
பிறகு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2011 ஆண்டு  மக்கள் தொகை கணக்கீட்டின் படி தமிழ்நாட்டு மொத்த மக்கள் தொகை  7,21,47,030. இவர்களில் பறையர் மற்றும் அவரது கிளைக்குழுவினர்  எண்ணிக்கை  91,73,139. தேவேந்திரர்கள் மற்றும் அவரது கிளைக்குழுவினர் எண்ணிக்கை 24,65,096.
அருந்ததியர் மற்றும் அவரது கிளைக்குழுவினர்  எண்ணிக்கை 21,50,285. இதுவே பட்டியல் சமூக மக்களின்  அதிகார பூர்வ மக்கள் தொகை. இதன் அடிப்படையில் பார்த்தாலும் அருந்ததியர் வகுப்பினர் 3% சதவிகித்ததிற்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.

2009 காலகட்டத்திலேயே வெகு சில அமைப்புகள் உள் இட ஒதுக்கீட்டு முறையை  எதிர்த்தன. அவற்றையெல்லாம் சமூக நீதிக்கு எதிரானது போல்  திமுக ஆதரவு சக்திகள் சித்தரித்தனர்.இதே ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ரங்கராஜன் தலைமையில் 
உள் இடஒதுக்கீட்டை முறையை ஆதரித்து கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் நானும் நண்பர்கள் சிலரும் கலந்துகொண்டோம்.

பட்டியல் சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை கூட்டவேண்டும் மற்றும் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. இவற்றை செய்தாலே உள் ஒதுக்கீட்டினால் பிற பட்டியல் வகுப்பினர் பாதிக்கப்படுவது கணிசமாக குறையும். ஆனால் இதை செய்யாமல் திமுக அரசு உள் ஒதுக்கீட்டை மட்டும் கொண்டு வருவது பிரச்சனையை மடைமாற்றும் செயல் மட்டுமல்ல முரண்களை கூர்மைபடுத்தவே உதவும் என்றோம்.மேலும் அருந்ததியர் போல் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலும் வாய்ப்பில்லாத சமூகக் குழுக்கள்  இருக்கிறார்கள். அவர்களுக்கும் உள் ஒதுக்கீடு அறிவிக்க கோர முடியுமா என்று நாங்கள் எங்கள் வாதத்தை வைத்தோம்.இத்தகைய வாதங்களால்  கூட்டம் முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. இறுதியில்  சமூக நீதி குரலை நெறிப்பதாகவும், சாதிவெறியுடன் கேள்வி எழுப்புவதாகவும்  எங்கள் மீது குற்றம் சாட்டி கம்யூனிஸ்ட் எம்.பி மற்றும் கூட்ட ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தை கலைத்து சென்றனர்.

அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பான திமுக அரசு கூட்டிய கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அண்ணன் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பங்கேற்று ஆதரவு அளித்தனர். உள் ஒதுக்கீட்டு முறையின் சிக்கல்களை அங்கே எடுத்துரைக்கவில்லை. பல்வேறு சிக்கல்கள் இத்தனை ஆண்டுகளில் நடந்து வந்தும் கூட அரசியல் ரீதியாக எந்த கருத்தையும், போராட்டங்களையும் நடத்தவில்லை.

உள் ஒதுக்கீடு அறிவிக்கப்படுவதற்கு முன்பு என்று நினைக்கிறேன். அதனை இங்கே ஒரு தகவலாக சொல்ல விரும்புகிறேன்.
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பினால் எஸ்சி/எஸ்டி கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் திமுக அரசால் நிரப்பப்பட வேண்டியிருந்தது. இதை நிரப்புவதற்கு முன் எந்த போராட்டமும் செய்யாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கான  பணியிடங்களை நிரப்பி விட்டு எஸ்சி/எஸ்டி இடங்களை நிரப்பினார் கருணாநிதி. இதுதான் சமத்துவ பெரியாரின் சமூக நீதி.

இந்நிலையில் தான் உள் ஒதுக்கீட்டின் குளறுபடிகளை பேசாமலிருந்த,விசிக
பொது செயலாளர் ரவிக்குமார்,சமீபத்தில் ஆதிதிராவிடராக ஒன்றிணைவோம் என்று திடீரென ஒருநாள் கூறினார். அதற்கு  எதிர்ப்பு வலுக்கவே உடனே  ஆதிதிராவிடர் என்பது சாதி பெயர் அல்ல அருந்ததியர் மற்றும் தேவேந்திரர் அல்லாத சாதிகளை உள்ளடக்கிய குழுவின் பெயர் என்று ஒரிரு நாட்களில் மாற்றி பேசினார்.

சமீபத்தில் விசிகதலைவர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்ற போது கொடுத்த மனுவில் ஆதிதிராவிட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதால்  ஆதிதிராவிடர் என்ற பெயரை நீக்க வேண்டும் என்றார்.

முதலில் ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம் என்று கூறிவிட்டு, பிறகு அந்த பெயர் சாதி பெயர் இல்லை என்றும் கூறிவிட்டு, மூன்றாவதாக அந்த சொல் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். இது விசிக பிரச்சினையோ ரவிக்குமார் பிரச்சினையோ மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை. எனவே இதிலொரு தெளிவான பார்வையை வழங்க வேண்டும் அல்லவா? தனிநபர் நிலைபாடா? பேஸ்புக் ஆடியன்ஸுக்கான நிலைபாடா? கட்சி நிலைபாடா? என்ற குழப்பம் நீடிக்கிறது. இவற்றில் நேரத்திற்கு ஏற்ப ஒன்றை தேர்ந்தெடுத்து சொல்லிக்கொள்கிறார்கள்.
எத்தனை குழப்பம்? எத்தனை முரண்பாடு? இதைப் பற்றி யாரிடம் விவாதிக்கிறார்கள்? யார் யார் விவாதிக்கிறார்கள்? அந்த கட்சி நிர்வாகிகளை கேட்டால் நாங்களே உங்களை போல் தெரிந்து கொள்கிறோம் என்கிறார்கள். இவற்றில் சனநாயக முறை இருக்கிறதா என்பது தான் நம் கேள்வி.

ஒரு சமூக பிரச்சினை குறிப்பிட்ட நபர்களுக்கு தேவைப்படும் போது பேசுவதாகவோ, தேவைப்படாத போது மெளனமாக இருந்து கொள்வதும் சரிதானா? அவர்கள் பேசும் போது ஆமாம் போடுவதும் பேசாத போது அமைதியாக இருந்து கொள்வதும் தான் தலித்துகளுக்கான வேலையா?
இதில் ஏற்படும் முரண்பாடுகளை பற்றி கேள்வியே எழுப்பக் கூடாதா?

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் (மட்டும்) ரவிக்குமார் ஆதிதிராவிட /பறையர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ரோஸ்டர் முறையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அதன் காரணமாக பறையர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்க வேண்டிய தேவை உள்ளதாகவும் திடீரென கண்டுபிடித்து உள்ளார். முதலில் இந்த கருத்து கட்சியின் கருத்தா அல்லது ரவிகுமாரின் தனிப்பட்ட கருத்தா என்று  வழக்கம் போல் தெளிவில்லை. ஏனெனில் இது பற்றிய கேள்வி எழுப்பினால் கட்சி ஆதரவாளர்களாக காட்டிக் கொள்ளும் சிலரே வந்து எதிர்கொள்கின்றனர்.

கட்சியின் கருத்து என்றால் ரோஸ்டர் முறையின் சீர்கேடுகள் இத்தனை நாட்கள் நடந்தும் இதுவரை ஏன் கண்டுகொள்ளவில்லை? அதற்காக கட்சி எடுத்த போராட்டங்கள் என்ன? அருந்ததியர் ஒதுக்கீட்டை ஓட்டிய ரோஸ்டர் முறையால் பறையர்கள் பாதிக்கப்படுவதை தற்போது கண்டுபிடித்த ரவிக்குமார், இதுநாள் வரை என்ன செய்தார்? முன்பு உள்ஒதுக்கீட்டை ஆதரித்த நோக்கம் என்ன?மருத்துவர் கிருஷ்ணசாமியின் பாஜக ஆதரவை ஏற்க முடியாவிட்டாலும் இந்த விசயத்தில் அவரின் கருத்திற்கு 12 ஆண்டுகள் கழித்து ரவிக்குமார்  வந்தடைகிறார்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு,தேவேந்திரர் பெயர் மாற்றம், வன்னியர் உள் ஒதுக்கீடு போன்ற நிகழ்வுகளால் பறையர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். அதனடிப்படையில் பறையர் சமூகத்துக்கு தனியே மக்கள் தொகை அடிப்படையில் (2011 மக்கள் தொகை அடிப்படையில்) 12.57%  இடஒதுக்கிடு வேண்டும் என்ற கோரிக்கையும் கூட எழுந்து  வருகிறது.

இதேவேளையில் தான்"நான் திமுக உறுப்பினர்;விசிக உறுப்பினர் இல்லை"என்று ரவிக்குமார் நீதிமன்றத்தில் கூறியதால் சர்ச்சை எழுந்தது. அதை மறைக்க பறையர்களின் வலுவான மனக்குமுறலை தான் எடுத்து வெளிப்படுத்தி அதனை மறைத்துக் கொள்ள முனைகிறாரே ஒழிய பறையர் வகுப்பின் மீது உள்ள அக்கறையால் அல்ல.எவ்வளவு நல்ல கருத்தாக இருந்தாலும் தன்னுடைய நலனுக்கு உதவவில்லை எனில் ரவிக்குமார் பேச மாட்டார் என்பதை அவர் வரலாற்றை புரட்டி பார்த்தால் தெரியும். அதே போல எந்த கருத்தையும் அந்தந்த தருணத்தில் எழுப்பி அப்போதைய தேவை தீர்ந்ததும் விட்டு விட்டும் சென்று விடுவார். ஆதிதிராவிடராய் திரள்வோம் என்கிற முழக்கம் அப்படி தான் இப்போது கிடக்கிறது.

சமூகத்திற்கான நல்ல கோரிக்கைகள் இவ்வாறு சுயநலமாக கையாளப்படுவதால் அவை நீர்த்து போவதற்கே அவர் உதவுகிறார்.பிறகு உண்மையான ஒருவர் வந்து அவற்றை எடுத்து பேசினாலும் நம்பாமல் போவதற்கான வாய்ப்பு தான் அதிகம்.

சிலர் முகநூலில் எழுதுவதை போல ரவிக்குமார் மீது தனிப்பட்ட விரோதமெல்லாம் இல்லை. அவர்  மீது எழுப்ப வேண்டிய அளவிற்கு கேள்விகள் எழுப்பப்படவில்லை என்பது தான் உண்மை. இன்னும் சொல்ல போனால்  அவர் சொல்லும் பிரச்சினைகளில் கூட நமக்கு பெரிய முரண்பாடு இல்லை.மாறாக சொல்லுபவர்கள் யார்? கடந்த காலத்தில் எப்படி நடந்திருக்கிறார்கள்? குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்து வெளிப்படுத்துகிற நேர்மையில் தான் பிரச்சினை. ரவிக்குமாரிடம் நாம் எழுப்பும் பிரச்சினை அவரின் நேர்மையின்மை தான்.

உள் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில்  நடைமுறைப்படுத்தப்பட்டு அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்தது.எனவே ரோஸ்டர் அநீதிக்கு அதிமுகவை மட்டும் குற்றம் சுமத்த முடியாது.

இப்படியான ஒரு பிரச்சனையை பேசும்போது கடந்த காலத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டது, தற்போது என்ன நிலைப்பாடு எடுக்கப்போறோம் என்பதை தெளிவாக்கவேண்டும். நீண்ட காலம் வஞ்சிக்கப்பட்ட , பெரும் எண்ணிக்கையில் வாழும் மக்கள் குழு சார்ந்த பிரச்சினையில் கூடுதலான பொறுப்பு இருக்க வேண்டும். தங்களுடைய நலனுக்கு ஏற்ப பேசி அவர்களை தொடர்ந்து வஞ்சிப்பதில் நியாயமில்லை.

Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

மாநாடு