அதிகாரத்துடன் உரையாடிய ஆதிநாயகன் -என்.சிவராஜ்

 


பேராசிரியர் என்.சிவராஜ் அவர்கள் மத்திய சட்டமன்றம் (1937-47) மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் (1945-46) இருந்த காலகட்டத்தில் அவரின் பணிகள் நம் சமூகம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு முன்னோடியாக இருந்து அதிகாரத்துடன் உரையாடி தீர்வை கண்டுள்ளார் என்பது வியப்பை அளிக்கிறது.

பிரிட்டிஷ்  இந்தியாவின் மத்தியச் சட்டமன்றத்தில் (Central Legislative Assembly) மார்ச் மாதம் 1942 ஆம் ஆண்டு பேராசிரியர் என்.சிவராஜ் அவர்கள் அரசு துறை பணியிடங்களில் பட்டியல் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டி தீர்மானம் கொண்டுவந்தார்.

அதனை தொடர்ந்து 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் பேராசிரியர் என்.சிவராஜ் அவர்களின் கோரிக்கையை ஏற்று பட்டியல் மக்களுக்கு அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் மத்திய அரசு பணிகளில் 12யில் 1 மடங்கு அல்லது 8.33% ஒதுக்கீடு வழங்கியது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் அரசு துறைகளில் அகில இந்திய அளவில்  இடஒதுக்கீடு பெற்றது இதுவே முதல் முறை ஆகும். அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் (All India Scheduled caste federation) மாபெரும் வெற்றியாகவும்  இந்நிகழ்வு அமைந்தது.

பேராசிரியர் N. சிவராஜ்  அவர்கள் 20 நவம்பர் 1945 ஆம் ஆண்டு  சென்னை மாநகராட்சியின் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில் 29  ஜனவரி 1946 ஆம் ஆண்டு குடிசை பகுதி அபிவிருத்திக்கு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு தலைவர் பேராசிரியர் என்.சிவராஜ் அமைப்பாளராகவும் எம்.தாமோதரன் நாயுடு மற்றும் உறுப்பினர்கள் சிலரும் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் குடிசை பகுதிகளை சுகாதாரத்தோடு அமைத்து மக்களுக்கு வழங்க திட்டம் தீட்டினார். அப்போது சென்னையில் 200 க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் இருந்தன. இது சென்னை மக்கள் தொகையில் 5 யில் 1 பங்கு ஆகும். அதிலும் குறிப்பாக 1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 1,03,338  பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் சென்னையில் மாநகரில் வசித்தனர்.

தொழில் புரிவதற்கு ஏதுவாக உள்ள இடங்களில் வீடுகள் கட்டி கொடுக்க பேராசிரியர் என். சிவராஜ்  முயற்சி எடுத்தார். அதன் முதல் கட்டமாக சிவராஜபுரம் குடிசை பகுதியை சீர்திருத்தி அமைத்தார். கோடம்பாக்கம், பழைய சிலேட்டர் ஹவுஸ் சாலை-பிரிவு 19, ரிட்சி தெரு, வால்டாக்ஸ் ரோடு, கஜபதி காலடி தெரு, திருவல்லிக்கேணி, இப்ராகிம் சாகிப் தெரு போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை கட்டி தந்தார். இதோடு இணைத்து மக்கள் குடியிருந்த பகுதிகளில் பொது கழிப்பிடம் கட்டி கொடுக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

மாநகராட்சி ஏழை மக்களுக்காக ஒதுக்கிய நிதிக்கு கூடுதலாக செலவு ஆனாலும் அதையும் தாண்டி நிதி நெருக்கடியை சமாளித்து மக்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்தி கொடுத்தார். இவரின் ஆட்சி காலம் இரண்டாம் உலக போரின் முடிவுற்ற காலம் என்பதால் மூன்று லட்சக்குக்கும்  அதிகமான மக்கள் வீடு மற்றும் உணவு இல்லாமல் பாதசாரிகளாக சென்னையில் வாழ்ந்தனர். அதனால் கூடுதலாக 5000 வீடுகள் கட்டி தர அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்துவந்தார்.

புதிய குடியிருப்பு அமைக்கப்பட்ட இடங்கள் மற்றும் மற்ற குடிசை பகுதிகளில் என குழந்தைகள் படிப்பதற்கு 16 குடிசை பள்ளிகளை ஏற்படுத்தினார். இதன்மூலம்  மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 41,441 லிருந்து 47,202 ஆக உயர்ந்தது. மேலும் வருகை விழுக்காடு பள்ளிகளில் 77.4% லிருந்து 80.2%  உயர்ந்தது. இதில் பட்டியல் சமூக  குழந்தைகள் எண்ணிக்கை 6596 லிருந்து 8212 ஆக உயர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததனால்  பள்ளி நேரத்தை இரண்டாக பிரித்து ஷிப்ட் முறையை கையாண்டது குறிப்பிடத்தக்கது. 

பேராசிரியர் என்.சிவராஜ் மேயராக இருந்த ஓராண்டுக்குள் நான்கு  பூங்கா, ஆறு மைதானம், கூவம் நதி சீரமைப்பு, மக்கள் பூங்கா, மக்கள் அரங்கம் தற்போது நேரு விளையாட்டு அரங்கம், பிச்சைக்காரர்கள் விடுதி, அனாதை விடுதி, முதன் முதலாக பள்ளி தினம் அல்லது பெற்றோர் தினம், மூன்று வாசக படிக்கும் அறைகள் என பல பணிகளை செய்துள்ளார்.

இதே காலகட்டத்தில் அகில இந்திய செடியூல்ட் கேஸ்ட் பெடரேஷன் (AISCF) அமைப்பின் தலைவராகவும் இருந்தார். ஒரு வகையில்  பேராசிரியர் என்.சிவராஜ் மேயராக இருந்த காலத்தை பெடரேஷன் ஆட்சி காலம் என்றே கூறலாம். அதேசமயம் இந்த காலகட்டம் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றினார். முன்னோடிகளும், சிறந்த முன்னுதாரணங்களும் நம்மிடம் இருக்கும்போது தற்காலத்தில் நினைவுபடுத்த வேண்டிய அவசியத்தை இந்நாளில் நாம் உணர வேண்டும்.


தகவல் உதவி : அம்பேத் தவமணி

Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

மாநாடு