பஞ்சமி நிலம் பாதுகாப்புக்கான தனிச் சட்டம் வேண்டும்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் திரமென்ஹீர் என்பவர் தலித் மக்களுக்கு நிலம் வழங்கிடக்கோரி பிரிட்டன் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதனடிப்படையில், பிரிட்டிஸ் அரசாங்கம் தலித் மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அரசாணை எண் : 1010 (ம) 1010A Revenue நாள் : 30.09.1892 மற்றும் அரசாணை எண் : 68 Education நாள் : 01.02.1893 ஆகிய இரண்டு அரசாணைகளை பிறப்பித்து, அதன்மூலம் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு சுமார் 12 இலட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் நிலங்களை வழங்கியது. இந்நிலங்களே பஞ்சமி நிலங்கள் அல்லது D.C land என்று அழைக்கப்படுகின்றன.
நில நிர்வாக ஆணையர் அலுவலக கடிதம் ந.க.எப்1/20616/2006-ல் 26.07.2006-ம் நாளிட்ட கடிதத்தில் தமிழகத்தில் மொத்தம் 1,26,113.06 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது எனவும், சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை எனவும் தமிழக அரசின் நில நிர்வாகத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நில நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி பார்த்தால் மீதமுள்ள 11,34,899.94 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
தலித் மக்களின் மண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிற தலித் விடுதலை இயக்கம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பஞ்சமி நிலங்களின் புள்ளி விவரங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தலித் இளைஞர்களை ஒருங்கிணைத்து வாட்சப் குழு ஒன்றை துவக்கியது. இக்குழுவை கட்சி சார்பற்று இயக்க வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை தலித் விடுதலை இயக்கம் எடுத்து செயல்படுத்தியது.
இக்குழுவில் இருக்கக்கூடிய ஒரு சில இளைஞர்கள் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், அந்த நிலங்களை தேடி கண்டுபிடித்து ஆவணப்படுத்த வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார்கள். அவ்வாறு ஆர்வமாக இருந்த நபர்களில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த P.முத்துராஜ் என்பவர் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் மண்ணுரிமைக்காக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக மனு செய்து வந்தார். முதலில் அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் ஏதுமில்லை என்கிற தகவலே கிடைத்தது.
தலித் விடுதலை இயக்கத்தின் பிமாராவ் சாக்கியா வழிகாட்டுதலின் அடிப்படையில் மறுபடியும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பஞ்சமி நிலம் தொடர்பான தகவல் கோரப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் கிராமத்தில் கீழ்கண்ட புல எண்களில் 32 ஏக்கர் 86 சென்ட் பஞ்சமி நிலம் இருப்பதை சாத்தான் குளம் துணை வட்டாட்சியர் உறுதிபடித்தியுள்ளார்.
1.புல எண்: 379/1 விஸ்தீரணம் 1.86.00
2.புல எண்: 385/2A1 விஸ்தீரணம் 2.45.00
3.புல எண்: 385/2A2 விஸ்தீரணம் 2.02.50
4.புல எண்: 385/2B விஸ்தீரணம் 3.36.50
5.புல எண்: 886/2A விஸ்தீரணம் 1.25.50
6.புல எண்: 886/2B விஸ்தீரணம் 0.36.00
7.புல எண்: 886/2C விஸ்தீரணம் 1.25.50
8.புல எண்: 761/1 விஸ்தீரணம் 0.73.00
மேற்கண்ட தகவலின் மூலம் கடந்த 2006-ம் ஆண்டு நில நிர்வாக ஆணையர் தூத்துக்குடி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்று கூறிய தகவல் பொய் என்று நிரூபணமாகிறது. இந்த மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்கிற வாதமும் உடைக்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களின் முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும் என்று, தலித் விடுதலை விடுதலை இயக்கத்தின் தலைவர் ச.கருப்பையா அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.
2006-ம் ஆண்டு நில நிர்வாக ஆணையர் கொடுத்த அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என்று கூறுகிறது. ஆனால் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கோரப்பட்டபோது சாத்தான் குளத்தில் 32 ஏக்கர் 86 சென்ட் பஞ்சமி நிலம் இருப்பதை கூறியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் தகவல் கேட்டால் எத்தனையோ மறைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை அடையாளம் காண முடியும்.
சாத்தான் குளத்தில் கண்டறியப்பட்ட நிலங்களை அரசு உடனடியாக பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வளவு சான்றுகளை நாம் அரசு கவனத்துக்கு கொண்டு சென்றாலும் மெத்தன போக்கையே கையாள்கிறது. இதற்கு காரணம் பஞ்சமி நிலத்தை பாதுகாக்க தனி சட்டம் இல்லாமையே, அதனால் அரசு நடப்பு கூட்டத் தொடரிலையே கர்நாடகம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பது போன்ற பஞ்சமி நிலம் பாதுகாப்புக்கான தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும்.
– மெய்அறிவு இணையத்தில் வந்துள்ள கட்டுரையின் லிங்க்
https://www.meiarivu.com/2021/09/07/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/

Comments
Post a Comment