24 கிராம கமிட்டி தலைவர் கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி
24 கிராம கமிட்டி தலைவர் கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகில் வயல்வெளி என்ற கிராமத்தில் அருணாசலம் ஜெகதாம்பாள் தம்பதியருக்கு 14 அக்டோபர் 1949 அன்று கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். சிறுவயது முதல் சமூக பிரச்சனையை துணிந்து பேசுவதிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
கிருஷ்ணமூர்த்தி தனது பள்ளிப் படிப்பை சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் விடுதியில் தங்கி படிக்கும்போது கண்காணிப்பாளரின் தவறை தட்டிகேட்டதால் கே.பி.எஸ்.மணியின் பாராட்டை பெற்றார்.
தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பள்ளி பருவதில்லையே தொடங்கிய கே.ஏ.கே 24 கிராம கமிட்டி தலைவர், துணை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆதிதிராவிடர் நல மாநிலக்குழு உறுப்பினர் என்று பல தளங்களில் பணியாற்றியுள்ளார்.
1970 காலகட்டத்தில் கடுமையான சாதிய பிரச்சனைகள் பூம்புகார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தலித் மக்களுக்கு நடந்தது. குறிப்பாக கே.ஏ.கே கிராமமான வயல்வெளியில் செத்த மாட்டை தூக்க மாட்டோம் என்கிற இழி தொழில் மறுப்பு சம்பவம் இவரை கடுமையாக பாதித்தது.
தலித் மக்கள் வசிக்கும் பெரும்பாலான கிராமங்களில் வெவ்வேறான சாதிய பாகுபாடுகள் இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்வு காண வேண்டும் என்பதற்காக சுற்றியுள்ள மேலபெரும்பள்ளம், இராசாங்குளம், தென்மணிக்கிராமம், வடமணிக்கிராமம், வயல்வெளி, சம்பக்கட்டளை, இளையமதுகூடம், திருவண்காடு, ஆரணியன் தெரு, நாகநாதன் கோவில், வடபாதி, கொடியன் தெரு, கீழையூர், நெய்தவாசல், சின்ன பெருந்தோட்டம், கொடியன் தெரு, கிளார் வெளி, ஆலங்காடு, கீழவானகிரி, குரங்கு புத்தூர் போன்ற கிராம தலித் மக்களை ஒன்றிணைத்து 24 கிராம கமிட்டி என்ற அமைப்பை தொடங்கினார். இதன் தலைவராக கே.ஏ.கே, செயலாளராக மேலபெரும்பள்ளம் ஆர். கலியமூர்த்தி, பொருளாளராக மேலபெரும்பள்ளம் பஞ்சவர்ணன் போன்றவர்கள் செயல்பட்டனர்.
24 கிராமத்துக்கும் ஒவ்வொரு தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் அனைவரும் 24 கிராம கமிட்டியின் உறுப்பினராக இருந்து செயல்படுவர். தங்கள் சமூக பிரச்சனைகளை தாங்களே தீர்த்து கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் கிராம கமிட்டி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பூம்புகார் அரசு கலை கல்லூரியில் தொடர்ந்து மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சாதிய மோதல் 1995 ஆம் ஆண்டு கடுமையாக இருந்தது. இந்த சாதிப் பிரச்சையை தீர்க்க 24 கிராம கமிட்டி தலைவர் கே.ஏ.கே தலைமையில் 13 ஆகஸ்டு 1995 அன்று சமாதான கூட்டம் நடந்தது. அதன் பிறகு பெரிய அளவிலான சாதிய மோதல்கள் கல்லூரியில் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு பல தலித் மாணவர்கள் கல்லூரியில் பயில வாய்ப்பை ஏற்படித்து கொடுத்தது. இதில் கே.ஏ. கே வின் பங்கு அளப்பரியது. பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை பல போராட்டங்களுக்கு பிறகு மேலபெரும்பள்ளம் கிராமத்தில் இச்சங்கம் கே.ஏ.கே தலைமையில் நிறுவியது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் (IRDP) மூலம் 1984 ஆம் ஆண்டு பூம்புகார் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது தனது கிராமத்தில் உள்ள 53 தலித் பயணாளிகளை தேர்வு செய்து வங்கி கடன் பெற்றுத்தந்தார். சுய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதை தன்னுடைய கொள்கையாக கொண்டிருந்தார்.
மயிலாடுதுறை ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் அவர்களிடம் மேலபெரும்பள்ளம் கிராம தலித் மக்களுக்கு வீட்டுமனை வழங்க கே.ஏ.கே கோரிக்கை மனு அளித்தார். மனுவின் காரணமாக 121 தலித் குடும்பங்களுக்கு 1 ஏப்ரல் 1985 அன்று தனி வட்டாட்சியர் வீட்டுமனை பட்டா வழங்க ஆணை பிறப்பித்தார்.
பூம்புகார் பஞ்சாயத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த 1981-1991 காலத்தில் காவேரி பட்டினம் பால் கூட்டுறவு உற்பத்தியார் சங்கம் ( பதிவு எண்:Z-495) தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டார். இதன் மூலம் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 24 கிராம தலித் மக்களுக்கு பசு மாட்டு லோன் வழங்கி அவர்களை பால் உற்பத்தியாளராக மாற்றினார். இன்றளவும் இச்சங்கம் செயல்பட்டும் தலித் மக்கள் பயனடைந்தும் வருகிறார்கள்.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் ச.கருப்பையா அவர்கள் 31.01.1996 அன்று அப்போதைய தமிழக அரசின் ஆதிதிராவிடர் நல மாநிலக்குழு உறுப்பினரான கே.ஏ.கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் மோசடி நடப்பதாகவும், இப்பிரச்னையை தாங்கள் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் குறைவான ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டும் பல்கலைக்கழகத்தில் நிரப்பட்டது.
ஆதிதிராவிடர் நல மாநில உயர்மட்ட குழு உறுப்பினராக இருந்த சமயத்தில் தலித் மாணவர்களுக்கு தனியே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக கல்லூரியும் விடுதியும் புதிதாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 2014 ஜூலை 31 ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் சட்டமன்ற உரையில் விதி 110 ன் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக இரண்டு பல் தொழில்நுட்ப கல்லூரி தொடங்குவதாக அறிவித்தார்.
தாட்கோ மூலமாக தலித் மக்களுக்கு சுய தொழில் பயிற்சி இவரின் கோரிக்கையில் அரசு செயல்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் புத்தூர், கொள்ளிடம் போன்ற பகுதிகளில் தையல், ஆசாரி, பெரம்பு சேர் பின்னுதல், போன்ற பயிற்சிகள் இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது, மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.
கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி தன் அரசியல் வாழ்வில் தனக்கு கிடைத்த அனைத்து பொறுப்புகளையும் மக்களின் பயன்பாட்டிற்கு அவரின் எல்லைக்கு உட்பட்டு செயல்படுத்தினார். தன் வாழ்நாள் முழுதும் திருமணம் செய்யாமல் தனது 72 வயதிலும் 24 கிராம கமிட்டி தலைவராக இருந்து மக்கள் பணி செய்து வருகிறார்.
நன்றி: முத்து பிரதீபன் சாக்கியா மற்றும் மேக.பிரவீன்
Comments
Post a Comment