தம்ம பந்தம்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள உறவு என்பது இன்று நேற்றல்ல பௌத்த மதம் உருவாதற்கு முன்பிலிருந்தே மொழியின் அடிப்படையில் தொடங்கியது. உலக முழுவதும் பௌத்த மதம் பரவி இருந்தாலும் தென்னிந்தியா மற்றும் தமம்பாணி என்கின்ற இலங்கை பகுதிக்கு மட்டுமே உரித்தான பல கூறுகள் உள்ளதை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படியான தனித்த கூறுகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதனை மொழி அடிப்படையில் தமிழ் பௌத்தம் என்கிற வரையரையில் நாம் புரிந்துகொள்ளலாம்.
அயோத்திதாசர் பண்டிதர் இலங்கை சென்று தீட்சைப் பெற்ற பிறகு அங்கு வாழும் பஞ்சமர்களுடன் தன் வாழ்நாள் இறுதிவரை தொடர்பில் இருந்தார். தமிழன் இதழுக்கு கொழும்பு பகுதியில் ஜோன் என்பவர் ஏஜண்டாக இருந்ததன் மூலம் இதழுக்கான வாசகர்கள் இருந்ததையும் அதன் தாக்கத்தையும் நம்மால் உணர முடிகிறது. பண்டிதரின் ஊக்கதால் மூன்று பௌத்த சங்கங்கள் தொடங்கி 1930ம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பண்டிதரின் தொடர்ச்சியாக பாபாசாகிப் அம்பேத்கர் 1950 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தில் கண்டியில் ஒரு மாதம் தங்கியுள்ளார். அங்கு செயல்பட்ட பஞ்சமர் இயக்கங்களின் தலைவர்களையும், பௌத்த சங்கங்களிடமும் உரையாடல் நிகழ்த்தி உள்ளார். 1956 ஆண்டு பாபாசாகிப் நாக்பூரில் மதம் மாறியபோது அதே நாளில் இலங்கையின் கொழும்பு, கண்டி, யாழ்பாணம் போன்ற மூன்று பகுதிகளில் 15000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பௌத்த மதம் மாறினார்கள். பஞ்சமர்களின் மதமாற்றதுக்கு பூர்வீகமாக தன்னை பௌத்தனாக உணர்த்தும் முக்கிய காரணம், மேலும் வேளாளர்களின் சாதிய அடக்குமுறைக்கு ஒரு சர்வதேச தீர்வாக பௌத்தம் அமையும் என்கிற அடிப்படையிலும் நடந்துள்ளது. அந்தளவிற்கு பண்டிதர் மற்றும் பாபாசாகிப் இருவரின் கருத்தும் பஞ்சமர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துயுள்ளது. இன்றளவும் பாபாசாகிப் நினைவாக யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியில் ஒரு தெருவிற்கு அம்பேத்கார் வீதி என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பண்டிதர் மற்றும் பாபாசாகிப் இருவரும் பரிநிப்பாணம் அடைந்த பிறகு இலங்கையுடனான இந்திய பட்டியல் சமூகத்துக்கு தொடர்பு இல்லாமல் போனது அதேக் காலகட்டத்தில் இலங்கையில் நடந்த அதிகார போட்டியில் பஞ்சமர்களின் நியாமான கோரிக்கைகள் வலுவிழந்து ஒரு கட்டத்தில் தேங்கி போனது ஒரு சில நேரங்களில் அப்படியான உரிமைகளை பேசினாலே உயிருக்கு ஆபத்து என்கிற நிலைக்கு பஞ்சமர்கள் தள்ளப்பட்டார்கள்
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் தமிழர் - சிங்களவர் என்ற பதத்தில் நடந்த போரின் காரணமாக அங்கு வாழும் பஞ்சமர்களின் பிரச்சினை பேசபடாமலே போனது, இது அங்கு வாழும் பஞ்சமர்களின் இயல்பான வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டுள்ளது
பெரும்பாலும் வசதிபடைத்த மேட்டுகுடியினர் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றபிறகு, புலம் பெயரும் சூழல் இல்லாத பஞ்சமர்கள் விடுதலை புலிகள் மற்றும் அரசுகளின் நெருக்கடியை கடந்து கூடவே சாதிய பிரச்சனையும் சந்தித்தனர். இவர்களின் குரல்கள் எழும்போதெல்லாம் புலிகளால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது, உட்சபட்சமாக புலிகளால் பஞ்சமர்கள் உயிர் இழப்புகளை சந்தித்தனர்.
தற்போதைய சூழலில் பஞ்சமர்கள் மறுபடியும் தங்களின் பிரச்சினைகளை பேச துவங்கியுள்ளனர். அந்த வகையில் யாழ் சிவில் சமூக நிலையம் , சைவ பௌத்த சங்கம் மற்றும் அம்பேத்கர் இயக்கம் இணைந்து தங்களின் நீண்ட கால பிரச்சினைகளை பேசுகிறார்கள். இந்திய பட்டியல் சமூகத்துக்கும் இலங்கை பஞ்சமர்களுக்கு மொழி கடந்து நமக்கு வரலாற்று உறவு இருக்கிறது. அது பண்டிதர் மற்றும் பாபாசாகிப் இருவரும் உருவாக்கிய தம்ம பந்தம். அந்த வகையில் பூரண நிம்மதியுடன் வாழ அவர்கள் வழியில் பயணிப்பது நம் கடமையாகும்.
ஆவணங்கள் உதவி : கவிஞர்,பத்திரிகையாளர். ரா.வினோத்
Comments
Post a Comment