தமிழர்களின் குல வழிபாடும் பௌத்தமும்

 

தமிழர்களின் குல வழிபாடும் பௌத்தமும்

ஒரு சமூகத்தின் வரலாற்றை யதார்த்தத்தில் இருந்தே கட்டமைக்க முடியும் அதுவே சரியானதும் ஆகும். மனிதனின் ஒவ்வொரு அசைவையும் அவனது பண்பாடே தீர்மானிக்கிறது. பௌத்த மதத்தில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பு புத்த தம்மத்தின் குறியீடான அறச்சக்கரம் மற்றும் அவரின் பாதம் அல்லது பாத பீடிகை வணங்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த பண்பாட்டு எச்சத்தை இன்றளவும் நம்முடைய  வாழ்வில் பார்க்க முடியும்.

இன்றைய சடங்கு முறைகள் நமது தொல்குடி மரபின் பண்பாட்டு எச்சமே, பண்பாடு ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்துக்கு உட்பட்ட நவீன தன்மையை அடைந்து வேறு வடிவம் எடுத்தாலும் அதன் உள்ளார்ந்த பண்பு மாறுவதே யில்லை, பண்பாட்டு கூறுகள் உருவாதற்கு வலுவான காரணம் இல்லாமல் சாத்தியமில்லை அதனால் பண்பாடு என்பது என்னை பொருத்தவரை இலக்கண முறைப்படி  காரணபெயர் என்பதே பொருத்தமாகும். அப்படியான ஒரு தொல்  மரபுதான் பாதவழிபாடு என்கிற பண்பாட்டு வழக்கம்.

பாதத்தை பாதுகாக்கும் மரபு இன்றும் நம்மிடம் தொடர்கிறது. சில நாட்களுக்கு முன்பு என் நண்பரின் உறவினர் இறப்புக்கு சென்றுருந்தேன் .இறந்த பெரியவருக்கு இறப்பு சடங்கு செய்பவர்  ஈர களிமண்ணை பலகையில் தட்டையாக்கி இறந்தவரின் பாதத்தில் ஒட்டி எடுத்தார் அந்த, பலகையை வீட்டின்  மூத்த பெண்  அதை மிகுந்த  மரியாதையாக பெற்றுக்கொண்டார். நான் அருகில் இருந்த நபரிடம் கேட்டேன் .அவர் இது ஊரில் பெரியவர்களுக்கு செய்யக்கூடிய சடங்கு கடைசியாக நாகலிங்கம் மாமாவுக்கு செய்தது என்றார். மேலும் இறந்தவரின் குடும்பத்துல பிறந்த குழந்தைக்கு இறந்தவரின் பெயரை வைத்துவிட்டு இறந்தவர் நடக்க தொடங்கிவிட்டார் என்று நம்பி அதுவரை பாதுகாத்து வந்த படியெடுத்து பாதத்தை ஆற்றில் கரைத்து விடுவோம் என்று கூறினார்.

பௌத்த நூலான மணிமேகலையில் பாத பீடிகையை வணங்கும் முறை இருந்ததை குறிப்பிடுகிறது. உருவ வழிபாடு வந்த பிறகும் நாம் பாத வழிபாட்டை தொடர்ந்து இறப்பு போன்ற நிகழ்வுகளில் பின்பற்றுகிறோம். மூத்தவர்களை  பாதம் தொட்டு வணக்கும் மரபு  இன்றும் இலங்கையை தமிழர்கள் மத்தியில் இருக்கும் சிறந்த பண்பாகும். தெற்காசிய நாடுகளில் மொத்தம் முவாயிரதுக்கும் அதிகமான புத்தரின் பாதங்கள் ஆய்வில் கிடைத்துள்ளது. அதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவை இலங்கையை சேர்ந்தவை என்பது குறிப்பிடதக்கது. இன்னமும் நாம் புத்தரின் பாதப்பிடிக்கையை  வணங்குகிறோம் என்பதற்கு இவையனைத்தும் நமக்கு நிகழ்கால சான்றுகளாகும்.

சிவனொளிபாதமலை:

இலங்கையின் சபரகமுவா, மத்திய மாகாணங்களுக்கிடையிலான 
எல்லையில் Adam's Peak என்கிற மலை அமைந்துள்ளது. பௌத்த மதத்தின் பாத வழிபட்டு முறை பிற்காலத்தில் தோன்றிய மதங்களில் அதன் தாக்கத்தை காணமுடிகிறது. Adam's Peak என்ற மலையை பௌத்தர்கள் ஶ்ரீ பாதம் (புத்தரின் பாதம்) என்றும் இந்துக்கள் சிவனொளிபாதம் (சிவனின் பாதம்) என்றும் இசுலாமியர்கள் பாவா ஆதம் மலை (ஆதாமின் பாதம்)  என்றும் வழிபடுகிறார்கள்.

வெவ்வேறு மதத்தினரும் ஒரே மலையில் தொன்மையான  வேவ்வேறு நம்பிக்கையில் கொண்டாடுவதற்கு காரணம் முன்பொரு காலத்தில் அனைவரும் ஒரே மதத்தில் பயணித்தவர்கள் அதாவது பௌத்தர்களாக இருந்தே , இலங்கையில் தமிழர்கள் இன்றும் சிவனொளி பாதமலையை வணங்குகிறார்கள்.  பௌத்த மதத்தில் இருந்த தமிழர்கள் கால போக்கில் மாற்றம் அடையும்போது நேரடியான மத அடையாளம் இல்லாமல் போனாலும் அந்த பண்பாட்டை விட முடியவில்லை என்பதற்கு சிவனொளிபாதமலை ஒரு சிறந்த சான்றாகும்.

அறச்சக்கரம்

பௌத்த மதத்தில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பு புத்தரின் பாதம் மற்றும் அறச்சக்கரம் போன்றவற்றை வணங்கும் முறை இருந்தது. அதுவே பிற்காலத்தில்  வைணவ கோவில்களில் விஷ்ணுவின் சிலையில் ஒரு கையில் சங்கும் மற்றொறு கையில் சக்கரமும்மாக மாற்று வடிவம் பெற்று இருக்கிறது.

இந்த அறச்சக்கர வழிபாடு மக்களிடத்தில் இன்றும் பண்பாட்டு தளத்தில் எஞ்சி நிற்கிறது. இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் அல்லது ஆழ்வார் கோவில் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக   சக்கரம் உள்ளது. வல்லிபுர ஆழ்வார் கோவிலின் மூலஸ்தானத்தில் சக்கரம் வைத்தே பூசை நடைபெறுவது வழக்கம். சூரிய வழிபாட்டிலும் வழிபாட்டுச் சின்னமாகச் சக்கரம் இடம்பெறுகிறது. இத்தகைய நடைமுறை இன்றளவும் இக்கோவிலில் நடைபெறுகிறது.

வல்லிபுரம் கோவிலின் அருகில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. வல்லிபுரம் புத்தர் சிலை பற்றி பௌத்த ஆய்வாளர் பீட்டர் சால்க் ஒரு காலத்தில் விஷ்ணு கோவில் புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதே சமயம் தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றி இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வல்லிபுரம் புத்தர் சிலை சான்றாக அமைவதாக குறிப்பிடுகிறார்.

ஆய்வாளர் மயிலை சீனு வேங்கடசாமி தன்னுடைய பௌத்தமும் தமிழும் நூலில் பெருமாள் கோவிலுக்கு அருகில் புத்தர் சிலை கிடைத்தால் ஒரு காலத்தில் விஷ்ணு கோவில் புத்தர் கோவிலாக அல்லது விகாராக இருந்திருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். வைதிக வளர்ச்சியின் போது விகார்களே சைவ,வைணவ கோவில்களாக மாற்றம் பெற்றது என்பதற்கு நம்மிடம் சான்றுகள் அதிகம் உள்ளன.

உருவ வழிபாடு தொடங்காத காலகட்டத்தில் பௌத்தர்கள் பின்பற்றிய வழிபாடுதான் புத்தரின் பாதம் மற்றும் அறச்சக்கரம். இந்த பௌத்த தொல் வழிபாட்டு முறையும் இலங்கை தமிழர்கள் மத்தியில் சிவனொளிபாதமலை,
வல்லிபுரம் விஷ்ணு கோவில் ஆகிய இரண்டு இடங்களிலும் தமிழர்கள்  வணங்கி பின்பற்றும் நடைமுறை நமக்கு பல உண்மைகளை வெளிக்காட்டுகிறது.

இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கென்று தனி தன்மையுடன் வாழ்ந்து வந்துள்ளார்கள். மேலும் பௌத்த மதத்தை பின்பற்றி தம்ம கருத்துகளை பரப்பினார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் வைதிகத்தின் வளர்ச்சியின் காரணமாக தன்னை தகவமைத்துகொள்ள தனது பண்பாட்டை குல வழிபாடாக மாற்றி வாழ்ந்த்துவந்தான் அதுவே காலபோக்கில் வைதிக அடையாளத்துடன் உள்ளார்ந்த பௌத்த சடங்குகள் நடைபெறுவதையே தற்போதைய சான்றாக புத்தரின் பாதம் மற்றும் அறச்சக்கர வழிபாட்டு முறைகள் நமக்கு உணர்த்துகிறது. இப்படியான சடங்கு முறைகளின் மூலம் தமிழர்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தனர் என்பதை நாம் அனுமானிக்கலாம்.

Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

வாத்தியார் வேலு 1916 -1982