ஆசிரியர் இல்லாமல் சென்டம் அடித்த ஆதிதிராவிட மாணவர்கள்

ஆசிரியர் இல்லாமல் சென்டம் அடித்த ஆதிதிராவிட மாணவர்கள் 

அருள் முத்துக்குமரன் 

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ந் தேதி வெளியானது. தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, அரசுப் பள்ளி, மாநகராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி, சமூக நலத்துறைப்பள்ளி , கள்ளர் சீர்திருத்த பள்ளி என்று மேற்கண்ட பள்ளிகளின் சாதனைகளை பட்டியலிடும் தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பற்றி எதுவும் பேசுவதில்லை. அதன் முன்னேறிய தேர்ச்சி விகிதம் பற்றி அரசு வெளிபடுத்தவில்லை.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 126 மேல்நிலை பள்ளியின் தேர்ச்சி விகிதம் தற்போது 91.15% ஆக இருக்கிறது. இவ்வாறான தேர்ச்சி சதவீதம் 2022ல் 83% ஆகவும், 2023ல் 88% ஆகவும், குறைந்து இருந்தது. கடந்த இரண்டு கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கூடியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதில் இந்த ஆண்டு 26 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 100% தேர்ச்சியும் மற்றும் 14 பழங்குடியின பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சியும் பெற்றது கல்வி துறை வரலாற்றில் மிக முக்கியமான வளர்ச்சியாகும்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 10 ந்தேதி வெளியானது. அதேபோன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆராயும்போது தமிழகத்தில் இருக்கும் 265 ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலத்துறை மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 85.05% ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. தேர்ச்சி சதவீதம் 2022 ல் 79% ஆகவும், 2023ல் 84% ஆகவும் இருந்துவந்த அதேவேளையில் 2024ல் 85.05% கூடியுள்ளது மிகவும் கவனத்துக்கு உரியதாகும். கூடுதலாக 66 ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலப் பள்ளிகள் 100% சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளின் 100% தேர்ச்சியை விளம்பரப்படுத்தி கொண்டாடும் தமிழக அரசு ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பள்ளிகளின் 100% தேர்ச்சியை கொண்டாடதது உள்நோக்கம் கொண்டது என்பதை தவிர வேறு என்னவாக இருக்கும்.

பள்ளி கல்வி துறையுடன் இணைப்பதற்கு முயலும் துறைவாரியான பள்ளிகளில் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இந்த கல்வியாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல பள்ளிகளில் பயின்ற பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் இந்த கல்வியாண்டில் கூடியுள்ளது. இந்த சாதனை என்பது பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வி பயில போதிய சுற்று சூழல் இல்லாமை போன்ற கடின தன்மைகளை கடந்து மாணவர்கள் இவ்வெற்றியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல பள்ளிகளில் மொழி பாடங்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாலை நேர சிறப்பு ஆசிரியர்களை நம்பியே ஆதிதிராவிட பள்ளிகள் இயங்கும் அவல நிலையில் இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பள்ளியின் ஒழுங்கை சரிப்படுத்தும் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமலே இயங்குகிறது. இது பள்ளியின் கற்கும் சூழலை எவ்வளவு கடுமையாக பாதிக்கிறது என்பதை கல்வி சூழலில் இருப்பவர்களால் உணரமுடியும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பிரச்சனையை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி கவனத்தில் எடுத்து செயல்படுவாரா?

ஆதிதிராவிட பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாமலே மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அரசு எதன் அடிப்படையில் பொது பள்ளியுடன் இணைக்கும் நடவடிக்கையை அரசு எடுக்கிறது மேலும் நீதிபதி சந்துரு எதன் அடிப்படையில் பொது பள்ளியுடன் இணைக்க பரிந்துரை செய்தார் என்றும் புரியவில்லை. ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல பள்ளிகளில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைந்து அதனை மேம்படுத்தாமல் பொது பள்ளியியுடன் இணைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது மாயையாக தோன்றுகிறது.

ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புதல்

கடந்த ஆண்டு பள்ளி கல்வி துறையின் கிழ் இயங்கும் பள்ளிகளில் மட்டும் ஆசிரியர் பற்றாக்குறையை ( பணிமூப்பு, பணிநிரவல் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர் ) கல்வியாண்டின் தொடக்கத்தில் நிரப்பிய திமுக அரசு, ஆதிதிராவிட நல பள்ளிகளில் மட்டும் செப்டம்டர் மாதம் நிரப்பியது. கடந்த ஆண்டைபோல் இல்லாமல் அரசு வரும் கல்வியாண்டில் ஆசிரியர் பற்றாக்குறையை மே மாதத்திலேயே கணக்கெடுத்து கல்வியாண்டின் தொடக்கத்தில் நிரந்திர ஆசிரியர்களைக்கொண்டு நிரப்ப வேண்டும். இல்லையேல் தற்காலிக ஆசிரியர்களை ஜூன் முதல் வாரத்தில் நிரப்ப வேண்டும்.  

கல்விச் சூழலில் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு தொடங்கும் அதற்குள்ளாக ஒட்டுமொத்த பாடத்தில் 50% நடத்தி முடிக்கப்பட்டிருக்கும். அதற்கு பிறகு காலிபணியிடங்களை நிரப்பினால் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கடும் பணி சுமையை உண்டாக்கும் இதில் பாதிக்கப்படுவது மாணவர்களே, இதை தெரிந்தே கல்வித்துறையில் தொடர்ந்து திமுக அரசு செய்வது கண்டனத்துக்குரியது. கல்விக்கு பயன்படும் துணை உபகரங்கள் சீருடைகள், நோட்டு , புத்தகம் , ஜாமன்றி பாக்ஸ் மற்றும் சிறப்பு வழிகாட்டிகள் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் தேர்ச்சி சதவீதம் மேலும் உயரும் என்பதில் மாற்று கருத்தில்லை.

சிறந்த ஆதிதிராவிட பள்ளி விருது 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மாணவர்களிடையே போட்டியை வளர்க்கவும், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பது உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில், ஆண்டுதோறும் சிறந்த ஒரு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியையும், ஒரு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியையும் தேர்வு செய்து, தலா ரூ.5 லட்சம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 2016-ம் ஆண்டில் அறிவித்தது.

இத்திட்டம் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் எத்தனை பள்ளிகளை தேர்வு செய்து அரசு ஊக்கபடுத்தியுள்ளது என்ற தகவலும் நமக்கு இதுவரை உறுதியாக கிடைக்கவில்லை, மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வரவு செலவு செயலாக்கத் திட்டம் 2023 - 2024 அறிக்கையில் இத்திட்டத்தை பற்றி எந்தவித தகலும் இல்லை. இத்திட்டத்தை அரசு கைவிட்டதா? என்ற சந்தேகமே நமக்கு மேலிடுகிறது. ஒரு ஆண்டில் ஒரு பள்ளியை தேர்வு செய்து 5 லட்சம் வழங்கும் திட்டத்தை கூட தமிழக அரசால் செயல்படுத்த முடியவில்லை. ஒரு மாவட்டத்திற்கு தலா ஒரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பள்ளியை தெரிவு செய்து செயல்படுத்த மனமில்லாமல் தலித்களின் நிதியை திருப்பி அனுப்பும் அரசு இதுபோன்ற திட்டங்களுக்கு செலவு செய்ய தயங்குவது ஏன்?

ஆதிதிராவிட நல விடுதி

ஆகஸ்ட் 2023 தமிழக அரசு அவசர நிலையில் மேற்கொள்ளப்படும் சிறு பராமரிப்பு பணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு விடுதி ஒன்றிற்கு தலா ரூ.50,000 ஒதுக்கியது. இந்த நிதி போதுமானதாக இல்லை என்றும் ஒவ்வொரு விடுதிக்கும் தனித்தனியே பிரச்சனை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியும் அரசு கவனத்தில் கொள்ளாததன் விளைவே கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயங்குடியில் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு சமையலர் மற்றும் 5 மாணவிகள் காயமடைந்தனர். இப்படி மோசமான நிலையிலே பெரும்பாலான ஆதிதிராவிட நல விடுதிகள் உள்ளன.  

ஒரு கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சில விடுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தபோது மாணவர்கள் கடுமையான குறைகளை முன்வைக்கின்றார்கள். மாணவர்கள் குறிப்பிடும் பொதுவான பிரச்சினைகள், விடுதிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள், துப்புரவு பணியாளர்கள் இல்லாமை, விடுதி காப்பாளர்கள் பற்றாக்குறையால் ஒரு காப்பாளர் நான்கு அல்லது ஐந்து விடுதிகளுக்கு பொறுப்பு வகிக்கிறார்.

விடுதி சமையலர் காலிபணியிடங்களை நிரப்பாமை, நீர் பற்றாக்குறை, கழிவறை பயன்படுத்த முடியாமல் இருப்பது, மின்விசிறி போன்ற எந்த வசதியும் இல்லாமல் இயல்பாக சுகாதாரமாக தங்கிபடிக்கும் சூழ்நிலையில் இல்லை என்பதை குறிப்பிடுகிறார்கள். பெண்கள் விடுதியின் நிலைமை மிக மோசமாகவே இருக்கிறது. இரவு காவலர்கள் இல்லாமலே பெரும்பாலான கிராமப்புற விடுதிகள் இயங்குகிறது. மேலும் 79 விடுதிகள் தனியார் கட்டிடத்தில் இயங்குகிறது. இப்படி மாணவர்கள் வாழத் தகுதியற்ற சூழலை உருவாக்கி இந்த மக்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்று கூறுவது நகைப்புகுறியதாக இருக்கிறது.

தமிழகத்தில் இயங்கும் 1331 விடுதிகளையும் சீரமைக்க ஆணையம் ஒன்றை அமைத்து அனைத்து விடுதிகளையும் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் விடுதிகளையும் சரி செய்ய வேண்டும். இப்படி ஆக்கபூர்வமான செயல்பாடுகளையே மாணவர்கள் அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

வாத்தியார் வேலு 1916 -1982