செப்டம்பர் மாத நீலம் தலையங்கம் வரலாற்று பிழை

 

செப்டம்பர் மாத நீலம் தலையங்கம் வரலாற்று பிழை

ஒய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்கி அதன் பரிந்துரையின் பேரில் தமிழக சட்ட மன்றத்தில் 2009  ஆண்டு அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் தி.மு.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் மூலம் அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் அனைத்து துறை பணிகளிலும், பட்டியல் சாதிகள் அனுபவித்துவரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பிரித்து மூன்று விழுக்காட்டினை 'அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீடு' என்று அருந்ததியினருக்கு தமிழக அரசு வழங்கியது. இத்தகைய தமிழக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பட்டியல் சாதிக்குள் அருந்ததியர் ஒரு பிரிவினராகவும், அருந்ததியர் அல்லாத பிற பட்டியல் சாதிகள் ஒரு பிரிவினராகவும் பிரிக்கப்பட்டனர்.

பத்திரிக்கை துறையில் சூத்திரர் மற்றும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் அனைத்து ஊடகங்களும் உள் ஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்து எழுதியுள்ளது. முற்போக்கு சாதி இந்துக்கள் ஆதரவு தெரிவித்து தன்னுடைய சமுக நீதியை நிலைநாட்டியுள்ளனர். அந்த வரிசையில் நீலம் இணைந்தது எதார்த்தமானதாக தெரியவில்லை.

கடந்த 2009 ல் விசிக உள் ஒதுக்கீடு ஆதரவு  நிலைப்பாட்டை எடுத்து தற்போது தன்னுடைய தவறை உணர்ந்து உள் ஒதுக்கீடு எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு வந்தது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஆனால் நீலம் இந்த முடிவை எடுத்திருப்பது அபத்தமானது. எந்த அடிப்படை ஆதாரமும்  இல்லாமல் பின்தங்கிய சமுகம் என்ற முடிவுக்கு எப்படி வந்தது.

உயர்கல்வியில் ஆதிதிராவிட-பறையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர்கள் அருந்ததியர்களைவிட அதிகமாக முன்னேறிவிட்டனர் என்று. நியாயப்படுத்த முயலும் முற்போக்குவாதிகள் 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பினை பின்னோக்கிப்பார்க்க வேண்டும் (ஏனென்றால் அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீடு சட்டம், 2001 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே உருவானது).

உயர்கல்வியில் பறையர்கள் 2 சதவீதமும், தேவேந்திர குல வேளாளர்கள் 2 சதவீதமும், ஆதிஆந்திரர்கள் 2.5 சதவீதமும், அருந்ததியினர் மற்றும் சக்கிலியர்கள் 1.2 சதவீதமும் பங்கெடுத்துள்ளனர். இந்த புள்ளிவிவரத்தினை அணுகும்போது அருந்ததியரல்லாத சாதியினர்கள் உயர்கல்வியில் பெருமளவில்
முன்னேறியதாகத் தெரியவில்லை. மாறாக அருந்ததியர் சிறப்பு உள் இடஒதுக்கீட்டில் இடம் பெற்றிருக்கும் ஆதிஆந்திரர்களே பறையர் மற்றும்
தேவேந்திர குல வேளாளர்களை காட்டிலும் முன்னேறியவர்களாகத் தெரிகிறார்கள். இங்கு ஒப்புநோக்க வேண்டியது பொதுப்பிரிவினரின் கல்வித்தரமும் பட்டியல் இன மக்களின் கல்வித்தரமும் தான். அதனடிப்படையில் நோக்கினால் இருவருக்குமான இடைவெளி மிகமிக அதிகமானது.

அருந்ததியர்கள் இழி தொழில் செய்கிறார்கள் என்ற அடிப்படையிலேயே உள் ஒதுக்கீடு வழங்கியது சரி என்றே ஒரு தரப்பு வாதிடுகிறது. அது உண்மைதானா என்று பார்த்தால் 2010க்கு முன்பான கணக்குப்படி வெறும் 5 சதவீதம் மட்டுமே தூய்மை சார்ந்த பணியில் உள்ளனர். உதாரணத்துக்கு 2014ல் ஆரணி நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் விவரத்தை தகவல் அறிவும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டபோது, 111 பணியாளர்களில்  SC - 98 , MBC - 9 , BC - 4 இதில் ஒருவர் கூட SCA வகுப்பை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இழி தொழில்களில் ஈடுபடும் மற்ற பட்டியல் சமூகங்களை ஏன் கணக்கில் கொள்ளவில்லை.

கடந்த 2009 ஆண்டு முதல் 2024 வரை 15 ஆண்டுகளில் இந்த 200 ரோஸ்டர் முறையால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் SCA அல்லாதவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்பதை எத்தனை முறை விளக்கியும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது எவ்வளவு கொடுமையானது.

நீலம் செப்டம்பர் தலையங்கம் இதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் வெறுமனே ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது நீலம் இதழ்  வரலாற்றில்  கரும்புள்ளியாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை. வருங்காலங்களில் நீலம் இதழின் நிறுவனர் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் உள் ஒதுக்கீடு  ஆதரவு நிலைப்பாட்டிற்கு விசிக கட்சியை போன்றே வரலாற்றில் பறையர் சமூக மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய தருணம் கட்டாயம் வரும் ஏனெனில், காலம் வலிமையானது.






Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

வாத்தியார் வேலு 1916 -1982