மதுரை பந்தல்குடி நடராஜான் (1939 - 2013)
மதுரை வட்டார பகுதியில் பட்டியல் சமூக ஆளுமைகள் தொடர்ந்து எல்லா காலங்களிலும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்கு பந்தல்குடி நடராஜன் ஒரு சான்று மட்டுமே, மதுரை மாநகரில் கோரிப்பாளையம் அருகே இருக்கும் பந்தல்குடி பகுதியில் சுந்தரம்- முத்தாவுடையம்மாள் ஆகியோருக்கு 05 ஆவது பிள்ளையாக 13 ஏப்ரல் 1939 அன்று நடராஜன் பிறந்தார். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 29 டிசம்பர் 1945 அன்று மதுரைக்கு வந்த பொழுது பந்தல்குடி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அன்று எட்வர்ட் மன்றத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் உரையை கேட்கவும் பந்தல்குடிலிருந்து மக்கள் திறளாக கலந்து கொண்டுள்ளனர்.ஆறு வயது சிறுவனாக இருந்த நடராஜன் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை காணும் வாய்ப்பை பெற்றார். அன்றிலிருந்து தன் இறுதி காலம் வரை கொள்கை மாறாத அம்பேத்திகரியவாதியாக வாழ்ந்தவர்.
மதுரையில் உள்ள மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிவைப்பள்ளியில் 1958 ஆம் ஆண்டு படித்து முடித்தார். 1960 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புது முக வகுப்பு (PUC) படித்து முடித்தார். கல்லூரி முடிந்ததும். 1961 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் எழுத்தர் பணியில் வேலையில் சேர்ந்தார். அரசுப்பணியில் இருந்த போதும் மக்கள்பணி செய்வதற்காக ஆர்வத்தில் 1963 ஆம் ஆண்டு Home Guard Police பணியில் சேர்ந்து பகுதி நேரமாக மதுரை காவல் துறைக்கு உறுதுணையாக பணி செய்தார்.
தனது அகமணவழ்வை தனலெட்சுமி என்பவருடன் 12 ஜூலை 1965 ஆம் ஆண்டு அமைத்துகொண்டார். அன்றைய கால கட்டத்தில் பட்டியலின மக்கள் தொகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதில் தயக்கம் இருந்திருக்கிறது. நமது சமூக உறவுகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் திருமணத்தை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பாடு செய்தார். தனது குழந்தைக்கு மீனாம்பாள், அம்பேத்கர், ரத்தினகிரி என்று தான் பயணித்த கொள்கையை வெளிப்படுத்தும் விதமாகவே நம்பிக்கையுடன் பெயர் சூட்டினார்.
1956 காலகட்டத்தில் தன்னுடைய பகுதியிலேயே அரசியல் சார்பற்ற "டாக்டர் அம்பேத்கர் நினைவு மன்றம்" என்ற பெயரில் அமைப்பு நடத்திவந்தார். இதன் பணிகளாக பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த, நினைவு நாட்களில் விழாக்கள் நடத்தி பாபாசாகேப் அவர்களின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டுசென்றார். சுற்று வட்டாரத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்வுகளை நடத்தினார்.
பட்டியல் சமூக தலைவர்களுடன்
பட்டியல் சமூக தலைவர்களுடன் ஒரு இணக்கமான போக்கை எப்போதும் கடைப்பிடித்தார்.1967 இல் அன்னை சத்தியாவாணி முத்து அமைச்சராக இருந்த பொழுது பாபாசாகிப் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தொடர்ச்சியாக 1970 ஆம் ஆண்டு சீர்காழியை சேர்ந்த மாவீரன் K.P.S.மணி அவர்களை அழைத்து வந்து மதுரையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடத்தியுள்ளார்.1970 ஆம் ஆண்டு தனது அம்பேத்கர் நினைவு மன்ற நிர்வாகிகளுடன் சென்னை சென்று ஆரிய சங்காரனை சந்தித்தார். பெரியவர் எல். இளையபெருமாள் அவர்களுடனும் தொடர்பில் இருந்துள்ளார்.
1972 ஆம் ஆண்டு பந்தல் குடிக்கு அருகேயுள்ள சுயராஜ்ஜியபுரம் பகுதியில் மாநகராட்சியின் பொதுக்குழாயில் பரையர்கள் குடி நீர் எடுப்பதில் பிரச்சினை எழுந்தபோது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வைத்து சாதி வெறியர்ளுக்கு நீதி மன்றம் மூலம் தண்டனை தண்டனை பெற காரணமாக இருந்தார்.
1975 ஆம் ஆண்டில் அமைச்சர் ராஜாங்கம் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் வை. பாலசுந்தரத்திடம் பந்தல்குடி மக்களுக்கு வீட்டு மனை கேட்டு மனு கொடுத்துள்ளார். பந்தல்குடி மக்களின் இட நெருக்கடியை உணர்ந்து தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையர் இவர்களிடமும் மனு அளித்தார். அதனை தொடர்ந்து 1978ல் மதுரை மீனாம்பாள்புரதத்தில் 150 பறையர் மக்களுக்கு வீட்டு மனை பெற்றுத்தந்தார். தனக்கோ தன் குடும்பத்திற்கோ ஒரு வீட்டு மனை கூட ஒதுக்கி கொள்ளவில்லை என்பதை இன்றைக்கு நினைத்தாலும் இந்த சமூகத்தின் மீது அவருக்கு இருந்த நேர்மையும், அர்ப்பணிப்பும் நம்மை ஆச்சியர்ய பட வைக்கிறது. அந்த பகுதிக்கு டாக்டர் அம்பேத்கர் காலனி என்று பெயர் சூட்டியதும் எவ்வளவு பொருத்தமாக அமைந்தது.
1982 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி கூட்டம் நடக்கும் அரங்கில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை வைப்பதற்கு முயற்சி செய்தது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டார். பாபாசகிப் அம்பேத்கர் புகைப்படத்தை கோரிப்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டுவந்து முன்னாள் அமைச்சர் கா. காளிமுத்து அவர்களை கொண்டு திறக்க செய்தார்.
DPI யின் துவக்க விழா 19.09.1983 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அன்னை சவிதா அம்பேத்கர் கலந்து கொண்டார். அன்னை சவிதா அம்பேத்ருக்கு பூங்கொத்து கொடுத்து அன்னையை வரவேற்றார். பாவலர் வை.பாலசந்தரம் தலைமையிலான அம்பேத்கர் மக்கள் இயக்கம் 1980களின் தொடக்கத்தில்
பரவத் தொடங்கியது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மதுரை மாவட்ட ஆலோகராகவும் பணியாற்றினார்.
1984 ஆம் ஆண்டு மதுரை அவுட் போஸ்ட்டிலிருந்து மேலூர் செல்லும் சாலைக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் வை. பாலசுந்தரம் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் 08 ஜனவரி 1984 அன்று மதுரையில் நடந்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் சாலை எனும் பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதையும் குறிப்பிட்டு, 02.பிப்ரவரி 1984 அன்று தேதியிட்ட தனது லெட்டர் பேடில் மதுரை மாநகராட்சி மேயராக இருந்த பட்டுராஜனுக்கு தனது அமைப்பின் சார்பாக மனு அளித்தார். மதுரை மாநாகராட்சி மாமன்ற உறுப்பினர் வீ. பாண்டி என்பவரும் 21 ஜூன் 1984 அன்று ஒரு மனுவை இதே கோரிக்கையை முன்வைத்து கொடுத்தார். இந்த இரண்டு மனுக்களையும் கவனத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 21 ஜூலை 1984 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.
"மதுரை மாநாகராட்சி வார்டு எண் 09, அழகர்கோவில் சாலையில் உள்ள அவுட்டோஸ்ட் பெரியார் சிலையிலிருந்து மேலூர் சாலை வரை டாக்டர் B.R .அம்பேத்கர் சாலை என்று பெயரிடப்படுகிறது என தீர்மானம் எண் 200 மூலம் நிறைவேற்றப்பட்டது. இது பந்தல்குடி நடராஜன் தொடர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனலாம். 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ந்தேதி பாரதிய தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் மலைச்சாமி காலமானார். அவரின் இறுதி நிகழ்வு வீரவணக்க கூட்டத்தில் பந்தல்குடி நடராஜன் பங்கு கொண்டார்.
31 டிசம்பர் 1989 அன்று மாவீரன் மலைச்சாமிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திலும் பந்தல்குடி பகுதி தோழர்களுடன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் V பலராமன், இரா. திருமாவளவன், பேராசிரியர் ஜோசப் சேவியர், T.T.S. முதல்வர் கம்பர் மாணிக்கம் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டனர். 21 ஜனவரி 1990 அன்று DPI இயக்கத்திற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கு மதுரை டிராவல்ஸ் பங்களாவில் கூட்டம் நடைபெற்றது. அதில் DPI இயக்கத்தின் முக்கிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர் மாலை 03 மணிக்கு நடைபெற்ற கூட்டத்திற்கு செங்கோடன் தலைமை வகித்தார். ஜோசப் சேவியர், பெ.சக்திவேல் (எ) ஆற்றலரசு ஊர்க்காவலன், விஸ்ணுதாஸ், ஜெயராம், பந்தல்குடி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சுப்பிரமணி வரவேற்றார். மு.மாதவன் நன்றி தெரிவித்தார்.
மாவீரன் மலைச்சாமியின் தம்பி அ. விஜயன் DPI இயக்கத்தின் மாநில அமைப்பாளராக இரா. திருமாவளவன் அவர்களை முன்மொழிந்தார். பந்தல்குடி நடராஜன் அதை வழி மொழிந்தார். போட்டியின்றி DPI இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் இயக்கத்தின் மாநில அமைப்பாளராக இரா. திருமாவளவன் தேர்வுசெய்யப்பட்டார்.வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் அரசியல் வாழ்வை எழுதும் போது பந்தல்குடி நடராஜன் பெயரை தவிர்க்காமல் எழுத வாய்ப்பில்லை என்பதே யதார்த்தம்.
14 ஏப்ரல் 1990 அன்று DPI இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் இயக்கத்தால் நடத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு தொடக்க விழா
பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் தங்களது பகுதி மக்களோடு கலந்து கொண்டார். 07 பிப்ரவரி 1993 அன்று
மதுரை பந்தல்குடி முகாம் சார்பாக
நடைபெற்ற பொதுக்கூட்டம
பந்தல்குடி நடராஜன் முன்னிலையில்
நடைபெற்றது. அம்பேத்கர் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார். இந்தப் பொதுக் கூட்டத்தில் இரா. திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார். சங்கமி நடராஜன் ப.ம.க.பூ. சந்திரபோசு தியாகி இம்மானுவேல் பேரவை பெ.சக்திவேல் (எ) ஆற்றலரசு ஆகியோர் கலந்து கொண்டு
உரையாற்றினர்
பந்தல்குடி மக்களும். ரிக்ஷா தொழிற்சங்கமும் சேர்ந்து பாபாசாகேப் அம்பேத்கருக்கு சிமென்ட் சிலைய கோரிப்பாளையம் செல்லூர் சாலையில் வைத்திருந்தனர். அந்த சிலையை ஒரு லாரி மோதி விபத்து ஏற்படுத்தி சேதமடையவே புதிய மார்பளவு வெண்கல சிலை வைக்க முடிவெடுத்து 14 ஏப்ரல் 1997 ஆம் ஆண்டு பந்தங்குடி முகாம் சார்பில் இரா.திருமாவளவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வரலாற்று நிகழ்விலும் பந்தல்குடி நடராஜன் சிறப்பாக தனது பங்களிப்பை முன்னின்று நடத்தினார்.
17 மே 1997 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சாதி கலவரத்தில் பந்தல்குடி அம்பேத்கர் சிலை சாதி வெறியர்களால் உடைக்கப்பட்டது. மாபெரும் கலவரத்தை பந்தல்குடி சந்தித்தது. அதனை தொடர்ந்து சுப்பிரமணியபுரம் , மீனாம்பாள்புரம் ஆகிய இடங்களில் பாபாசாகிப் அம்பேத்கர் சிலைகள் உடைத்து நொறுக்கபட்டது. அதையொட்டி துப்பாக்கி சூடு நடந்து ஒரு உயிர்பலியும் ஏற்பட்ட பிறகே சாதி கலவரம் சற்று ஓய்ந்தது. பந்தல்குடியில் சிலை திறந்து ஒரு மாதத்தில் உடைக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிலையை மறு சீரமைப்பு செய்து மீண்டும் பாபாசாகிப் அம்பேத்கர் சிலையை நிறுவியதில் பந்தல்குடி நடராஜனின் பங்கு முக்கியமானது.
1988ஆம் ஆண்டுமாவீரன் மலைச்சாமி தலைமையிலான பாரதிய தலித் பேந்தந்தர்ஸ் DP| இயக்கத்தின் முதன்மை ஆலோசகராவும் செயலாற்றினார்.
இரா. திருமாவளவன் தலைமையிலான
இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் இயக்கத்திலும் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். சமூக பணியில் எந்த வித தொய்வும் இல்லாமல் உழைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசகர் பந்தல் குடி அய்யா சு .நடராஜன் அவர்கள் 6 மே 2013 அன்று இயற்கை எய்தினார். இப்படியான எளிய மக்களின் பிரச்சினைக்கு தன்னுடைய பிரச்சனையாக கருதி மக்கள் பணி செய்த பந்தல்குடி சு .நடராஜன் போன்ற வட்டார தலைவர்களிடம் இருந்து இன்றைக்கும் சமூக பணி செய்ப்பவர்கள் கற்க வேண்டியவை ஏராளம் இருக்கிறது.
Comments
Post a Comment